ஒரு தனிக் கொடிமரம், அசோக மரங்கள், இரண்டு வகுப்பறைகள், ஒரு அலுவலகம் - மற்றும் 10 மாணவர்கள். மலைகள் மற்றும் புல்வெளிகளால் சூழப்பட்ட இந்தப் பள்ளிக்குத்தான் அரவிந்த் தியோகர் ஜூன் 16 அன்று முதன்முதலில் வந்தார்.
புனேவின் போரியண்டி கிராமத்தில் உள்ள ஓராசிரியர் ஹோல் வஸ்தி தொடக்கப் பள்ளியில், அவர் தலைமை ஆசிரியராகவும், எழுத்தராகவும், பியூனாகவும், ஆசிரியராகவும் இருந்தார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 3 அன்று, 46 வயதான தியோகர், இரண்டு வகுப்பறைகளில் ஒன்றில் களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு இறந்தார்.
அவர் தனது உறவினருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய தற்கொலைக் குறிப்பில், 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள வேறு பள்ளிக்குச் சென்ற தனது ஒன்பது மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியாததால் வருத்தமடைந்ததாகக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
”அவருக்கு இடமாற்றம் வந்தபோது தியோகர், இந்த பள்ளியை தனது முதல் விருப்பமாக தேர்வு செய்தார். நாங்கள் முதலில் பள்ளிக்குச் சென்றபோது, அவர் தனது 100 சதவீத உழைப்பையும் தருவதாக என்னிடம் கூறினார்”, என்று ஹோல் வஸ்தியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள உருளி கஞ்சனில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியையான அவரது மனைவி மனிஷா தியோகர் கூறினார்.
தியோகரின் மரணத்திற்குப் பிறகு, மனிஷாவும் அவரது இரண்டு குழந்தைகளும் - பொறியியல் படிக்கும் ஒரு மகள் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் - போரியண்டியில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள புரந்தர் தாலுகாவில் உள்ள தங்கள் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.
”மிர்வாடியில் உள்ள அவரது பழைய பள்ளியில் (போரியண்டியிலிருந்து 18 கிமீ) ஏழு ஆசிரியர்கள் மற்றும் 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். நான்கு வகுப்புகளில் வெறும் 10 மாணவர்களைக் கொண்ட ஓராசிரியர் பள்ளி இதுவே அவருக்கு முதல் முறை.
கோடையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால், பள்ளி மோசமான நிலையில் இருந்தது. ஜூன் 16 அன்று திறக்கப்பட்டபோது, என் கணவர் தனது மாணவர்களின் உதவியுடன் அதை சுத்தம் செய்ய முடிவு செய்தார்”, என்று மனிஷா நினைவு கூர்ந்தார்.
பள்ளியை சுத்தம் செய்வது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியபோது, விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான பெற்றோர்கள், இது குறித்து தியோகரிடம் விளக்கம் கேட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு, தியோகர் அதிக பாடங்கள் எடுக்காததால் அவர்கள் மீண்டும் ஒருமுறை கோபமடைந்தனர். எனவே அவர்கள் ஒன்பது மாணவர்களை பள்ளியில் இருந்து விலக்கி அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தனர்.
"எனது கணவர் அவர்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, விஷயங்களை சரிசெய்ய இன்னும் ஒரு வாய்ப்புக்காக கெஞ்சினார்," என்று மனிஷா கூறினார்.
தியோகரின் தற்கொலைக் குறிப்பில் பள்ளிக்கான அவரது கனவு குறிப்பிடப்பட்டுள்ளது.
“முன்பு பணியமர்த்தப்பட்ட மிர்வாடி மற்றும் குப்தேவாஸ்தி பள்ளிகளில் நான் நல்ல சேவை செய்தேன், எனக்கு அங்கு சிறந்த சக ஊழியர்கள் இருந்தனர். நான் ஹோல் வஸ்தி என்ற ஓராசிரியர் பள்ளிக்கு மாற்றப்பட்ட பிறகு, பணிச்சுமையின் காரணமாக, நான் மன உளைச்சலுக்கு ஆளானேன், நான் விரும்பியபடி பெற்றோரின் இதயங்களை வெல்ல முடியவில்லை, ”என்று அவர் எழுதியிருந்தார்.
“ஜூன் மாதத்தில் 13 நாட்கள், பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய முடிவு செய்ததால், பாடத்திட்டத்தில் இருந்து சரியாக பாடம் நடத்த முடியவில்லை.
அறிமுகங்கள், அரட்டைகள், பாடல்கள் போன்றவற்றில் நாங்கள் நேரத்தை செலவிட்டோம். நானும் மாணவர்களும் கழிப்பறையை சுத்தம் செய்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடையவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
தனது குடும்பத்தில் இருந்து மூன்று குழந்தைகளை போரியண்டி பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றிய ரவீந்திர போர்கர் கூறும்போது, “ஜூலை மாதம் நடந்த பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது, தியோகர் சார் எங்களிடம் ஓராசிரியர் பள்ளியில் பணிபுரியும் பழக்கமில்லாததால் சிரமப்படுவதாக கூறினார். எங்கள் குழந்தைகள் முன்பு வேறு பள்ளியில் படித்தார்கள், ஆனால் கோவிட் காரணமாக போரியண்டி பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அவர் சிரமப்படுவதால், குழந்தைகளை மாற்றினேன்.
வாட்ஸ்அப்பில் தியோகரின் தற்கொலைக் குறிப்பை பார்த்த பிறகு, நானும் அருகிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் ஹோல் வஸ்தி பள்ளிக்கு சென்றோம்.
அவர் தரையில் கிடந்தார். அவரது மனைவிக்கு போன் செய்தோம். அவர் வந்த பிறகு, உருளி கஞ்சனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், என்றார் ரவீந்திரன்.
தியோகர் பின்னர் உருளி காஞ்சனில் இருந்து 23 கிமீ தொலைவில் உள்ள புனேவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆகஸ்ட் 8 அன்று இறந்தார்.
யாவத் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமந்த் ஷெட்ஜ், "தியோகர் தனது தற்கொலைக் குறிப்பில் யாரையும் குற்றம் சாட்டவில்லை" என்று கூறினார்.
தியோகரின் முந்தைய பள்ளியைச் சேர்ந்த சக ஊழியர் ராம்தாஸ் குஞ்சீர், அவர் பல வாரங்களாக மனச்சோர்வில் இருந்ததாக தெரிவித்தார்.
”அவரது மாணவர்கள் அனைவரும் வெளியேறினால் அவர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார் என்று நான் அவரை ஆறுதல்படுத்தினேன், ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டதாக நினைத்தார்”, என்று அவர் கூறுகிறார்.
பள்ளியில் எஞ்சியிருந்த ஒரே குழந்தை அர்னவ், 1 ஆம் வகுப்பு மாணவர். அவரது தந்தை தத்தாத்ரயா ஹோல் கூறுகையில், உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால், அர்னவை பள்ளியிலிருந்து வெளியே வேறு இடத்திற்கு அனுப்ப முடியாது.
ஆனால் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறும்போது, அர்ன்வ்வையும் வேறு பள்ளிக்கு மாற்றி விடும்படி தியோகர் சார் என்னிடம் கூறியாதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த புனே ஜில்லா பரிஷத்தின் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக கல்வி அதிகாரி (முதன்மை) சந்தியா கெய்க்வாட் தெரிவித்தார்.
அரவிந்தின் மரணத்தை ஓராசிரியர் பள்ளி என்ற அமைப்போடு இணைப்பது தவறு என்று கூறிய அவர், “ஒரு ஆசிரியர் பள்ளிகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. ஹோல் வஸ்தி சம்பவத்தை ஒரு விதிவிலக்காகவே கருத வேண்டும்.
தற்கொலைக்கு வேறு காரணங்களும் இருக்கலாம். மாவட்டத்தில் தற்போது 10 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களுடன் 370 பள்ளிகள் உள்ளன. மிகக் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் அதே வேளையில், இதுபோன்ற பள்ளிகளில் ஒரு ஆசிரியர் சிரமப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை,” என்றார் கெய்க்வாட்.
அவர் இந்த பள்ளியில் சேருவதற்கு முன்பு, தனது நண்பர்களிடம் இதை மாற்றிக் காட்டுவதாக சொன்னார்.
அவரிடம் ஒரு மாணவன் மட்டுமே எஞ்சியிருந்தது என்பது அவரை முற்றிலும் தோல்வியுறச் செய்தது. நான் அவருக்கு ஆறுதல் கூற முயற்சித்தேன், ஆனால் அவர் இப்படிச் செய்வார் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, என்று கண் கலங்குகிறார் மனிஷா…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.