ஒரு கடைக்காரர் தனது கிராமத்திற்குள் "சந்தேகத்திற்குரிய நபர்கள்" நுழைவதைக் கண்காணித்து வருகிறார். ஒரு முன்னாள் ஹெராயின் போதைக்கு அடிமையானவர் உள்ளூர் மக்களுக்கு கபடி கற்றுக்கொடுக்கிறார், தெற்கு மால்வாவில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடவில்லை.
”கிராமத்திற்குள் சந்தேகப்படும்படியாக யாரேனும் நுழைவதை நான் கண்டவுடன், உள்ளூர் நாஷா ரோகோ குழுவிடம் தெரிவிக்கிறேன்.
காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்படுவதால் அவர்கள் அந்த நபரை சோதனை செய்யலாம். குழு அமைக்கப்பட்டதால், கிராமத்தில் போதைப் பொருள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கு போதைக்கு அடிமையானவர்கள் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும், என்று ஃபரித்கோட் மாவட்டத்தின் சாதிக் கிராமத்தில் DJ உபகரணங்களை வாடகைக்கு விடும் பல்ஜிந்தர் சிங் (46) கூறினார்.
பதிண்டா, மான்சா, ஃபெரோஸ்பூர், ஃபரித்கோட், முக்த்சார் மற்றும் சங்ரூர் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நாஷா ரோகோ குழுக்கள் உருவாகியுள்ளன.
பஞ்சாப் முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் இந்தக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதால், இயக்கம் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழுக்களை உருவாக்குவதற்கு என்ன வழிவகுத்தது என்பதை விளக்கிய மான்சாவின் ஜோகா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சீரா தில்லான், அரசாங்கமும் காவல்துறையும் மட்டும் போதைப்பொருளைக் களைய முடியாது என்பதை உணர்ந்ததே இந்தக் குழுக்களை உருவாக்க வழிவகுத்தது.
அடுத்த தலைமுறை போதைப்பொருளால் அழிந்துவிடுவதற்கு முன்பு தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்தனர், என்றார்.
பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் மார்ச் மாதம் மாநில சட்டமன்றத்தில், கிட்டத்தட்ட 2.62 லட்சம் போதைக்கு அடிமையானவர்கள், அரசு போதை ஒழிப்பு மையங்களில் சிகிச்சையில் இருப்பதாகவும், தனியார் மையங்களில் சுமார் 6.12 லட்சம் பேர் தங்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மாநிலத்தில் 10 லட்சம் போதைக்கு அடிமையானவர்கள் இருக்கலாம் என்றும், இது மொத்த மக்கள் தொகையான 3.17 கோடியில் கிட்டத்தட்ட 3 சதவீதம் என்றும் அவர் கூறியிருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹெராயின் போதைக்கு அடிமையான, பதிண்டாவின் பாய் ரூபா கிராமத்தைச் சேர்ந்த பக்ஷிஷ் சிங், (37) இப்போது கிராம இளைஞர்களுக்கு கபடியில் பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், போதைப்பொருள் சப்ளையர்களுக்கு எதிராகவும் போராடுகிறார்.
சிட்டாவை (ஹெராயின்) விட்டுவிடுவது சாத்தியம், நான் என் வாழ்க்கையை வீணாக்குகிறேன் என்பதை உணரும் முன் போதைக்காக பல லட்சங்களை செலவழித்தேன். இப்போது, இந்த சாபத்திலிருந்து மற்றவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறேன்.
பதிண்டாவின் துல்லேவாலா கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான பால்பகதூர் சிங், நாஷா ரோகோ குழுவை முதலில் அமைத்தவர்களில் ஒருவர்.
”சுமார் 30 குழுக்கள் வாட்ஸ்அப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்த குழுக்களை உருவாக்கியதில் இருந்து சில நேர்மறையான மாற்றங்களை நாங்கள் கவனிக்கிறோம்: அடிமையானவர்கள் சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளனர், சிலர் இந்தக் குழுக்களில் சேர்ந்துள்ளனர், வெளிப்படையாக போதைப்பொருள் நுகர்வது நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் போதைப் பொருள் வியாபாரிகள் கிராமத்துக்கு வருவதை தவிர்க்கின்றனர், என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் கொலை மிரட்டல்கள்
சில உள்ளூர்வாசிகள் இந்த குழுக்களுக்கு ஆதரவு திரட்ட சமூக ஊடகங்களின் சக்தியைத் திரட்டியுள்ளனர். ஜோகா கிராமத்தின் சீரா இன்ஸ்டாகிராமில் 20,000க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் கொண்டுள்ளார். அவரது பெரும்பாலான ரீல்கள், போதைப் பொருள் வியாபாரிகளை எதிர்கொள்வதைக் காட்டுகின்றன.
எனது கிராமத்தில் நாஷா ரோகோ குழு உள்ளது.
சுமார் இரண்டு வருடங்களாக போதைப்பொருளுக்கு எதிராக போராட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறேன். கடத்தல்காரர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்கள் கேமராவில் சிக்கும்போது, பிரச்சினையின் அளவை மக்கள் உணர்கிறார்கள், என்றார்.
இருப்பினும், போதைப்பொருள் வியாபாரிகளை எதிர்கொள்வது ஆபத்து நிறைந்தது. 30 வயதான சோனி தில்வான், ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள தில்வான் கிராமத்தைச் சேர்ந்த ஹர்பகவான் சிங்குடன் கடத்தல்காரர்கள் எனக் கூறப்படுபவர்களை எதிர்கொண்டதாகக் கூறினார்.
இதில் ஹர்பகவான் சிங் ஆகஸ்ட் 4 அன்று அவர் கண் முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் உள்ளூர் அரசியல்வாதி என்று கூறிய சோனி, போதைக்கு எதிராக போராடும் ஒவ்வொரு நபரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். எனினும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எங்களை நாசமாக்குவதை அனுமதிக்க முடியாது, என்றார்.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி, துல்லேவாலா கிராமத்தைச் சேர்ந்த விசாகா சிங் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாரும் கைது செய்யப்படவில்லை. பதிண்டாவின் பூச்சோ கலன் கிராமத்தில், செயற்பாட்டாளர் சுக்விந்தர் சிங், போதைப்பொருள் வியாபாரிகளை எதிர்கொள்ளும் போது சுடப்பட்டார்.
ஃபரித்கோட் கிராமத்தைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எனது கிராமத்தில் ஒரு கடத்தல்காரரிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து நான் காவல்துறையில் புகார் அளித்தேன். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாகத் திரிவதால், போதைப்பொருளுக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடுமாறு எனது குடும்பத்தினர் என்னிடம் கூறினர், என்றார்.
இருப்பினும், சில உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இந்த குழுக்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவியது.
பக்தா பாய் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் விவசாய சங்கத் தலைவர் அவதார் சிங் கூறுகையில், சில போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். ராம்புரா புல் எம்எல்ஏ பால்கர் சிங் சித்துவுக்கு நன்றி. நாஷா ரோகோ கமிட்டிகளை ஆதரிக்குமாறு தொகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் கமிட்டிகள் காவல்துறையுடன் அமைதியற்ற உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஜூலை 23 தேதி வெளியான ஒரு வைரல் வீடியோ, பஞ்சாபின் போதைப்பொருள் அச்சுறுத்தலில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது, பதிண்டா நகரில் நடந்த சோதனையின் போது எஸ்எஸ்பி குல்னீத் சிங் குரானாவை நசிப் கவுர் ஒருவர் எதிர்கொள்வதைக் காட்டுகிறது.
நாஷா ரோகோ குழுக்களின் உருவாக்கம் மற்றும் பணியை வரவேற்று, பதிண்டா ரேஞ்ச் ஏடிஜிபி எஸ்பிஎஸ் பர்மர், “எங்கள் இலக்குகள் ஒன்றே என்பதால் இந்தக் குழுக்கள் நல்ல செய்தி.
இருப்பினும், கமிட்டிகள், ரெய்டு போன்றவற்றை நடத்தி சட்டத்தை மீறக்கூடாது. மாறாக, கடத்தல்காரர்களின் நடமாட்டம் குறித்து, உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்தக் குழுக்களை அணுக காவல்துறை திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு, அவர்கள் அளிக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் வரவேற்போம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.