பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பெய்ன்ஸ் ஞாயிற்றுக்கிழமை ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் ஜோதி யாதவ் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், ஜோதி தற்போது மான்சாவில் காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இது திருமணம் நடக்கும் என குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியது. ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 34 வயதான யாதவ், பல் மருத்துவராகவும் தகுதி பெற்றவர்.
2019-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் லூதியானா தெற்கு எம்எல்ஏ ராஜிந்தர்பால் கவுர் சீனாவை எதிர்த்து நின்றபோது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அவர் யாதவை தனது பகுதியில் தெரிவிக்காமல் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதற்காக, பொதுவெளியில் கண்டித்தார்.
யாதவ், பின்னர் லூதியானாவில் ஏசிபியாக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் லூதியானா போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் தான் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக எம்.எல்.ஏ.விடம் கூறியிருந்தார். பின்னர் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “தேடல் நடவடிக்கையை நடத்துவதற்கு முன்பு போலீசார் எந்த அரசியல்வாதி அல்லது எம்எல்ஏவுக்கும் தெரிவிக்கக்கூடாது” என்று கூறினார்.
மரியாதை எப்போதும் தேவை. போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் நாங்கள் தேடுதல் வேட்டை நடத்தினோம். நான் என் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன, ஆனால் தவறான நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாது, என்று அவர் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியில் தொண்டராக சேர்ந்த ஹர்ஜோத் பெய்ன்ஸ், பின்னர் 2016 ஆம் ஆண்டு கட்சியின் மாநில இளைஞர் பிரிவு தலைவராக உயர்த்தப்பட்டார். ரோபரின் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 32 வயதான பெய்ன்ஸ் ஆனந்த்பூர் சாஹிப்பின் கம்பீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
பெயின்ஸ் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் கூடுதல் தகுதி பெற்றவர்.
அவர் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் லூதியானாவின் சஹ்னேவால் தொகுதியில் 2017 இல் போட்டியிட்டார், ஆனால் சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஷரஞ்சித் சிங் தில்லானிடம் தோல்வியடைந்தார். 2022 மாநிலத் தேர்தலில், ஆனந்த்பூர் சாஹிப்பில் இருந்து 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் அப்போதைய சட்டமன்றத் தலைவர் ராணா கேபி சிங்கை பெயின்ஸ் தோற்கடித்தார்.
முதல்வர் பகவந்த் மானின் அமைச்சரவையில் சிறைத்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பெயின்ஸ் பதவியேற்றார். இருப்பினும், பின்னர் அவர் அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு இலாகாக்களிலிருந்தும் விலக்கப்பட்டார், அதற்குப் பதிலாக பள்ளிக் கல்வியுடன் உயர் கல்வியும் வழங்கப்பட்டது.
பஞ்சாப் விதான் சபா சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான், “வரவிருக்கும் நாட்களில் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கப் போகும்” தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தார். மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்த பிறகு பதவியில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்ளும் இரண்டாவது அமைச்சர் பெயின்ஸ் ஆவார்.
கடந்த ஜூலை மாதம், மகரிஷி மார்க்கண்டேஷ்வர் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற டாக்டர் குர்ப்ரீத் கவுரை, முதல்வர் மான், அம்பாலாவில் திருமணம் செய்து கொண்டார். டாக்டர் குர்ப்ரீத்தும் ஹரியானாவில் வசிப்பவர், குருக்ஷேத்ராவைச் சேர்ந்தவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“