பெருமாளுக்கு உகந்த மாதகமாக கூறப்படும் புரட்டாசி மாதத்தில், மகாளய அமாவாசையுடன், இந்த ஆண்டு 2 பவுர்ணமி, ஏகாதசி பலன் தரும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் எப்படி விரதர்மிருக்க வேண்டும், வழிபாடு முறைகளை இங்கே பார்ப்போம்.
பொதுவாக பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்து மதத்தில், தமிழ் மாதமான புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கூறப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில்தான், சிறப்பு மிக்க அமாவாசைகளில் ஒன்றான மகாளய அமாவாசை வருகிறது.
அசைவம் சாப்பிடுபவர்கள்கூட, இந்த புரட்டாசி மாதத்தில் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார்கள். புரட்டாசி பிறந்ததுமே வீட்டை தூய்மை செய்து, தினமும் பூசை செய்வார்கள், புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு படையலிட்டு வழிபடுவார்கள். சிலர், 2-ம் சனிக்கிழமை, 3-ம் சனிக்கிழமை, 4-ம் சனிக்கிழமைகளில் தலவு படையலிட்டு வழிபடுவார்கள். சிலர் புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமையும் வழிபடுவது உண்டு.
இத்தகைய சிறப்பு மிக்க புரட்டாசி மாதம் இந்த ஆண்டு எப்போது தொடங்குகிறது, மகாளய அமாவை என்றைக்கு, 2 பவுர்ணமி, ஏகாதசி பலன் தரும் சனிக்கிழமை, விரதம் வழிபாடு முறையைப் பார்ப்போம்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 17ம் தேதி வரை வருகிறது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களுமே சிறப்பு பெற்று, புண்ணிய பலன்களை தரும் புண்ணிய மாதமாகத் திகழ்கிறது.
சூரிய பகவான் கன்னி ராசியில் பயணிக்கும் மாதமான புரட்டாசி மாதத்தின் முதல் நாள் துவங்கி, கடைசி நாள் வரை எந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அதற்கு ஒரே மாதிரியான பலன் கிடைக்கும்.
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதம் இருக்க முடியாதவர்கள் கூட புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை நினைத்து மனதார வழிபாடு செய்தால் ஏகாதசி விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி மாதத்தில் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் விழா நடத்தப்படுகிறது. தெய்வங்கள் பெருமாளை வழிபட பூமிக்கு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மக்கள் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் என சொல்லப்படுவதால் சனியால் பாதிப்பு இருப்பவர்கள் புரட்டாசியில் விரதம் இருந்தால் அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் மற்றும் கடைசி ஆகிய இரண்டு நாட்களுமே பெளர்ணமி திதியாக அமைந்துளது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அதே போல, இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தியும், 2வது சனிக்கிழமையில் ஏகாதசியும், கடைசி சனிக்கிழமை அன்று திருவோண விரதம், விஜய தசமியும், அதற்கு அடுத்த நாள் ஏகாதசியும் வருவதாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் அதாவது அக்டோபர் 2-ம் தேதி புதன்கிழமை மகாளய அமாவாசை வருகிறது. அதே போல, இந்த புரட்டாசி மாதத்தில் 2 பௌர்ணமிகள் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பொதுவாக புரட்டாசி மாதம் முதல் நாளில் இருந்தே வீட்டை தூய்மைப்படுத்தி தினந்தோறும் பூஜை அறையை அலங்கரித்து தீபம் ஏற்றி தூபம் காட்டி விரதத்தைத் தொடங்கலாம். சனி கிழமைகளில் விரதம் இருந்து இனிப்பு பொங்கல் பழங்கள் போன்ற நெய்வேத்தியங்களை படைத்து பெருமாளை வழிபாடு செய்யலாம். பெருமாள் கோவிலுக்கும் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.