பல்லாயிரக்கணக்கான உயிர்களை விழுங்கியது ஆழிப்பேரலை சுனாமி. ஆனால் ஆழ்கடலில் கிடைத்த முத்து போல் சுகாதாரத்துறை செயலாளருக்குக் கிடைத்தவள் தான் மீனா.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை உலகையே கதிகலங்க செய்தது இயற்கையின் சீற்றம். அசுர அலையின் கோரத் தாண்டவத்திற்கு லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது. ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும், நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையும் இழந்து நின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/meena-4.jpg)
அதே வருடம் சுனாமி தாக்கத்தின் இரண்டு நாட்களுக்குப் பிறகு கீச்சாங்குலம் கடல் பகுதியில் 2 வயதுக் குழந்தை ஆதரவு இல்லாமல் அழுதுகொண்டிருந்தது. தனியாகக் கடலுக்கு அருகே காணப்பட்ட அந்தக் குழந்தையை அப்பகுதி மீனவர்கள் மீட்டனர். அதே ஆண்டு ‘அன்னை சத்யா குழந்தைகள் காப்பகம்’ ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்தக் காப்பகத்தை அப்போது தஞ்சையின் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் வழிநடத்தி வந்தார்.
காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள் மீனா:
சுனாமியால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை இழந்த குழந்தைகள் சுமார் 99பேர் அந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அந்த 99 குழந்தைகளில் ஒருவராகத் தஞ்சம் அடைந்தார் மீனா. பெற்றோர், உறவினர்கள் என எல்லாச் சொந்தங்களையும் தனக்கான அடையாளத்தையும் இழந்து வாடிய மீனாவை மீனவர்கள் காப்பகத்தை கவனித்து வந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
அன்று முதல் அங்கிருந்த குழந்தைகள் மீது அதிக பாசமுடன், அரவணைத்து ஆதரவளித்து வந்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி. சுனாமி மீட்புப் பணிகளை கவனிக்க நாகை மாவட்டத்திற்கு ராதாகிருஷ்ணனை நியமித்தது அப்போதைய அரசு. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த போதிலும், தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அவர் காப்பகத்தில் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வந்தார். அவரையும் அவரது மனைவியையும் அங்கிருந்த குழந்தைகள் அப்பா - அம்மா என்றே அழைத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/meena-5-1.jpg)
ஆனால் அங்கிருந்த இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், 2010ம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு முறை காப்பகத்திற்கு சென்று குழந்தைகளை நேரில் சந்தித்து உரையாடி, ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்து நேரம் செலவழித்து வந்தார்.
ஆனால் சூழ்நிலையினாலும், அதிக வேலைகள் இருப்பதன் காரணத்தினாலும் அதன் பின்னர் அவரால் அங்குச் செல்லவே முடியவில்லை. சிறிய குழந்தைகளாக மீட்கப்பட்டவர்கள் பலரும் வளர்ந்து கல்லூரி, வேலை, திருமணம் என அடுத்தடுத்த வாழ்க்கை தருணங்களுக்கு நகர்ந்து சென்றனர். ஆனாலும் அதே காப்பகத்தின் ஆதரவில் இன்று வரை வசித்து வருபவர்கள் 2 பேர் தான். ஒன்று மீனா, மற்றொன்று சவுமியா.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/meena-2.jpg)
கடந்த வாரம், அதே நாகை பகுதியில் கஜ சீரமைப்பு பணிகளுக்காகச் சென்றிருந்த ராதாகிருஷ்ணனால், காப்பகத்தில் வசித்து திருமணமாகி சென்றவரைக் காண முடிந்தது. அவரிடம் மீனாவும் சவுமியாவும் எப்படி இருக்கிறார்கள் என அவர் விசாரித்தார். அப்போது இவர்கள் இருவர் மட்டுமே காப்பகத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது.
ராதாகிருஷ்ணன் - மீனா சந்திப்பு
அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில், சவுமியாவிடம் பேசியபோது அவள் கல்லூரியில் இருப்பதால் பின்னர் ஒரு நாள் நேரில் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மீனாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பதால், அவள் படிக்கும் பள்ளிக் கூடத்திற்கு போன் போட்டு தான் வருவதாகத் தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/meena.jpg)
பள்ளிக்குச் சென்று மீனாவுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரைப் பார்த்த சந்தோஷத்தில் அன்போடு ‘அப்பா’ என ஓடி வந்து ஆசையான அணைத்தால். ராதாகிருஷ்ணனும் அந்த நொடியே மனம் உருகி, மீனாவைப் பார்த்த சந்தோஷத்தில் மிதந்தார்.
பின்னர் அவருடன் பேசிய மீனு, ‘என்னைப் பார்க்க யாருமே வரவில்லை’ எனக் கூற, ஒரு நிமிடம் கண் கலங்கி நின்றார் ராதாகிருஷ்ணன். 2 வயதில் மீட்கப்பட்டு 17 வயதில் 12ம் வகுப்பு படிக்கும் மீனுவிடம், ‘ நீ நன்றாகப் படிக்க வேண்டும். எது பற்றியும் கவலை கொள்ள கூடாது. உனக்கு எது பிடித்திருக்கோ அதைப் படி’ எனக் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/meena-3.jpg)
மீனாவிற்கு பி.காம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை தெரிந்துகொண்ட அவர், அவளின் படிப்புக்கான செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக கூறினார். அதே பள்ளியில் சிறுமியுடன் சில மணி நேரங்களைக் கழித்துவிட்டு கனத்த இதயத்துடன் திரும்பினார்.
நீண்ட நேரம் அவளுடன் இருக்க முடியவில்லை என்றாலும் அப்பா என மீனா அழைத்த நெகிழ்ச்சியில் இருந்து மீளாமல் பிரியாவிடை பெற்றுச் சென்றார். அப்பா - மகள் இடையே நடந்த இந்த பாசப் போராட்டம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
பணமும் உடைமைகளும் எவ்வளவு சம்பாதித்தாலும், இது போன்ற உறவுகள் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வரமே...