வட இந்தியாவில் கடும் குளிர் நிலவினாலும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் எந்த சூடான ஆடைகளும் இல்லாமல் வெறும் வெள்ளை டி-சர்ட்டில் இருந்தார். ராகுல் காந்தியின் அந்த படங்கள், நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியது. 6 டிகிரிக்குக் கீழே வெப்பநிலை குறைந்தாலும், அவருக்கு மட்டும் எப்படி குளிரவில்லை என்று பலர் ஆச்சரியப்பட்டனர்.
ராகுல் காந்தி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் தனது யாத்திரையின் போதுகூட வெள்ளை டி-சர்ட் அணிந்திருந்தார்.

ஏன் சிலருக்கு மட்டும் அதிகம் குளிர்கிறது? இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?
இது அறிவியல் அல்ல, நமது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதுதான் என்கின்றனர் நிபுணர்கள். குர்கான் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனை டாக்டர் பி வெங்கட கிருஷ்ணன் கூறுகையில், அறிவியலை விட, இது நமது உடலின் உடலியல் அல்லது நமது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியது.
குளிர் மற்றும் சூடான உணர்வு சில நரம்புகள் மூலம் ஏற்படுகிறது, அதன் ஏற்பிகள் நம் தோலில் உள்ளன. இந்த நரம்புகளின் உணர்வுகள் மூலம், நீங்கள் குளிராகவோ அல்லது சூடாக உணர்கிறீர்கள். சிலரின் நரம்புகள் குளிரைத் தாங்கும், மற்றவர்களுக்கு முடியாது, என்று அவர் கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட நொய்டா சாரதா மருத்துவமனை டாக்டர் சுபேந்து மொஹந்தி, சிலருக்கு மற்றவர்களை விட குறைவாக வியர்ப்பது போல, சிலர் மற்றவர்களை விட குறைவாக குளிர்ச்சியாக உணர்கின்றனர்.
எலும்பு தசை மரபணுவில் உள்ள பொதுவான மரபணு மாறுபாடு ACTN3 பற்றிய 2021 ஆராய்ச்சியின் படி, ஐந்தில் ஒருவருக்கு ACTN3 மரபணுவில் ஏற்படும் ஒற்றை மரபணு மாற்றத்தால் ஆல்ஃபா-ஆக்டினின்-3 எனப்படும் தசை புரதம் இல்லை.
குருகிராம் பாராஸ் மருத்துவமனைகள் டாக்டர் ஆர்.ஆர். தத்தா, சிலர் குளிர்ந்த வெப்பநிலையை எதிர்க்கும் தன்மைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.
டாக்டர் கிருஷ்ணன் மேலும் கூறுகையில், தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்கள் குளிரை நன்கு பொறுத்துக் கொள்கிறார்கள், அவர்களின் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் என்பது உடல் கொழுப்பை பெரிதாக எதுவும் செய்யாமல் எரிக்கும் வீதமாகும். எனவே, மரபியல் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது, என்று அவர் விளக்கினார்.
மேலும், டாக்டர் தத்தா கூறுகையில், குளிரை தாங்குவதில், பாலினமும் பங்கு வகிக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால், எல்லா நேரங்களிலும் குளிர்ச்சியை உணரும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. பெண்களின் உடல்கள் குறைந்த வெப்பத்தை உருவாக்குகின்றன. இதனால் அவை அதிக குளிர்ச்சியாக உணரப்படுகின்றன.
அதிக தசைகள் கொண்டவர்கள் தங்கள் வெப்பநிலையை மற்றவர்களை விட சிறப்பாக பராமரிக்க முடியும். மேலும், தைராய்டு போன்ற ஹார்மோன் கோளாறுகள் உள்ள சிலருக்கு சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உணர்திறன் மாறுகிறது, என்று டாக்டர் தத்தா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“