ஆர்.சந்திரன்
இந்தியன் ரயில்வே 90,000 பேரை புதிதாக பணிக்கு தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அதிகபட்ச வயது வரம்பை 2 ஆண்டுகள் வரை தளர்த்த முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கான எழுத்துத் தேர்வை, தமிழ் உள்ளிட்ட 6 வேறு மாநில மொழிகளிலும் எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல் இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது
மிக அதிக பணியாளர்களைக் கொண்ட உலகின் முதல் நிறுவனம் என சொல்லப்படும் இந்திய ரயில்வே, அதன் சி பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் நிலை ஊழியர்களில் இந்த பணியாளர் தேர்வை நடத்த உள்ளது. இது பெரும்பாலும் ரயில் பாதை பராமரிப்பு, ரயில்வே லேவல் கிராஸிங் பராமரிப்பு, தச்சர் உள்ளிட்ட பணிகளோடு, அதிகபட்சமாக ரயில் என்ஜின் இயக்குனர் பணிகள் வரை அடங்கும். இதற்கான தேர்வு, பொதுவாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடத்தப்படும். ஆனால், மேற்கண்ட பணிகள் சிலவற்றின் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 வகுப்பு அல்லது ஐடிஐ, பொறியியல் டிப்ளமா அல்லது பட்டப்படிப்பு என்பதாகவே இருப்பதால், இதற்கான எழுத்துத் தேர்வை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பெங்காலி போன்ற மொழிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதவிர, வயது வரம்பிலும் பொதுப் போட்டி, மற்ற பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் என ஒவ்வொரு தரப்புக்குமான வயது வரம்பில் இருந்து 2 ஆண்டுகள் சலுகை அளித்து, அதை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கூடுதலான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.