ரனியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அப்படி ஒன்றும் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. ரஜினி ஆவதற்கு முன், சிவாஜி ராவ் ஒரு சாதரண மேடை நாடக நடிகராகத் தான் தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். நடிப்பின் மீது அவருக்கு இருந்த அதீத நாட்டம்தான் 70களின் தொடக்கத்தில் சிறிய மேடை நடிகராக இருந்த அவரை மெட்ராஸ் வரை கொண்டு வந்தது.
1975ல் கமல்ஹாசன் நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
இப்போது நான்கு தசாப்தங்களை கடந்தும் தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக ரஜினி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
ஜெயிலர் பட ஆடியோ வெளியிட்டு விழாவின் போது ரஜினி, தன் வாழ்வில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
எதிர்ப்பு, வெறுப்பு எல்லாருக்குமே இருக்கும். ஆனா எனக்கு வந்த வெறுப்பு சுனாமி மாதிரி. அப்போ இவ்ளோ சோஷியல் மீடியா கிடையாது, அதனால வெளியே தெரியல.
அந்த எதிர்ப்பு, வெறுப்பு அதுல இருந்து வந்த நெருப்புல வளர்ந்த செடி இந்த ரஜினிகாந்த். அந்த செடிய காப்பாத்துனது, காவலரா இருந்தது நான் நம்புன கடவுள், உழைப்பு, அதனால நான் சம்பாதிச்ச என்னோட தெய்வங்களான ரசிகர்கள் தான்.
சில பேரு வாழ்க்கையில நான் இதுதான் ஆகணும்னு திட்டம் போட்டு அதை அடைவாங்க. சில பேருக்கு தற்செயலா ஏதோ ஒரு சூழல்ல வாழ்க்கை அப்படியே மாறிடும்.
நான் நிறைய படங்கள் பார்ப்பேன். ஆனா ஆக்டர் ஆகணும்னு நான் கனவுல கூட நினைச்சது கிடையாது. ஏன்னா என்னோட லெவல் எனக்கு தெரியும். அப்போ 85 கிலோ இருப்பேன். தொப்பை ஒரு 4 இன்ஞ் முன்னால இருக்கும். கருப்பா இதுல எப்படி நான் ஓரு நடிகன் ஆவேன்னு நினைக்க முடியும். அப்போ சினிமா கம்பெனிகள் மெட்ராஸ்ல மட்டும்தான் இருந்தது. பெங்களூர்ல கிடையாது.
ஆனா படங்கள் மட்டும் நிறைய பார்ப்பேன். யாரை பாத்தாலும் அப்படியே இமிடேட் பண்ணுவேன். அதனால என் நண்பர்கள் எப்பவுமே என்னைய விடமாட்டாங்க.
ராஜபகதூர் என் ஃபிரெண்ட், பஸ் டிரைவர். பணக்கார பிள்ளை. 50, 60 ஆடு, மாடு இருக்கும். ஆனா அதெல்லாம் மெயிண்டேன் பண்றது ரொம்ப கஷ்டம், அதனால அவன் டிரைவிங் கத்துகிட்டு டிரைவர் ஆயிட்டான். ரொம்ப அழகா இருப்பான். டிரஸ், வாட்ச், செயின் எல்லாம் போட்டுருப்பான்.
நம்ம எப்போதும் டிரெஸ் பத்தி கவலைப்பட்டது கிடையாது. அவனுக்கு ஆக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை.
அப்போ நிறைய நாடகம் எல்லாம் போடுவாங்க. குருஷேத்திரா ஒரு நாடகம் பண்ணாங்க. அதுல ராஜபகதூர் பீஷ்மா கேரெக்டர் பண்ணான். என்னையும் கூட்டிட்டு போனான்.
அதுல ஜராசந்தா ஒரு ராட்சசன் கேரெக்டர். அவனுக்கும், பீமாவுக்கும் மல்யுத்தம் நடக்கும். அப்போ மாஸ்டர் முனுசாமி நாயுடு, என் உருவத்தை பார்த்து என்னை அந்த கேரெக்டர் பண்ண சொன்னாரு.
டையலாக் தெரியுமான்னு கேட்டாரு..
நான் தினமும் அங்கதானே உட்கார்ந்து இருக்கேன். தெரியும் சொன்னேன்.
நான் ரொம்ப நல்லா பண்ணேன். ராஜ்பகதூர்க்கு ரொம்ப ஆச்சரியம். அப்புறம் நானும் அந்த நாடகத்துல ஒரு பகுதி ஆயிட்டேன். டிராமாக்கு 3 நாள்தான் இருக்கு. மெயின் கேரெக்டர் துரியோதனா நடிக்கிறவருக்கு ஜூரம் வந்துட்டு. எந்திரிச்சுக் கூட நடக்க முடியாது.
முனுசாமி நாயுடு என்கிட்ட, நீங்க துரியோதனா கேரெக்டர் பண்ணுங்க சொன்னாரு. டையலாக் எல்லாம் தெரியுமா கேட்டாரு.
நான் தெரியும், ஆனா சாங்ஸ் எல்லாம் தெரியாதுனு சொன்னேன்.
அவரு, அது போதும். சாங் மட்டும் நான் சொல்றேன். நீங்க லிப் மூவ்மெண்ட் கொடுத்திருங்க சொன்னாரு.
சரி நான் நாளைக்கு சொல்றேன் வந்துட்டேன்.
ராஜ்பகதூர் என்கிட்ட வந்து நீ ஒத்துக்காதே, அவங்க வேற ஏதாவது பண்ணிப்பாங்க சொன்னான்.
நான் மறுநாள் அவர்கிட்ட போயிட்டு நான் பண்றேன் சொன்னேன்.
அப்போ என்.டி.ஆர். படம் ஒன்னு வந்தது. அதுல அவர் துரியோதனன் கேரெக்டர்ல வேற லெவல்ல பண்ணி இருப்பாரு. அதை அப்படியே இமிடேட் பண்ணி நான் பண்ணேன். எல்லாரும் அப்படியே ஆடிப் போயிட்டாங்க.
அடுத்தநாள் நாடகம். கெட்டப் எல்லாம் போட்டு எல்லாரும் வந்தாச்சு. நான் சூப்பரா பண்ணேன். டிராமா முடிஞ்சது. மேக்கப் ரிமூவ் பண்ற இடத்துல 60- 70 பேர் வெயிட் பண்றாங்க. யார் அது துரியோதனா கேரெக்டர் பண்ணதுனு?
இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை ரஜினி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.