அண்ணன், தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் (ஆகஸ்ட்) வரும் முழு நிலவு நாளில் இப்பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்து, அவர்களின் மணிக்கட்டில் ராக்கி எனும் புனித கயிறு கட்டுவர். பதிலுக்கு சகோதரர்கள், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரர்கள், சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.
இன்று (ஆக.19) ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது சமூகத்தின் அடிப்படை அம்சமே குடும்பம் தான். கூட்டுக் குடும்பமுறை முற்றிலும் மறைந்துவிட்ட இந்த காலத்தில், உடன்பிறப்புகளும், உண்மையான நட்புகளும் ஒரு சிலருக்கு மட்டுமே அமைகின்றன.
உறவின் பெருமையையும், நட்பின் பெருமையையும் நாம் இனியேனும் உணரவேண்டும். காலம் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடையே இந்த உறவுகளும் நட்புகளும் தான். இவற்றை தொடா்ந்து நேசித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது.
எனவே இந்த நாளில் நீங்கள் எங்கு இருந்தாலும், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உங்கள் உடன்பிறப்புகளை வாழ்த்த மறவாதீர்கள்.
உங்கள் அனைவருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“