ரக்சா பந்தன் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இளைய சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் தொடர்பின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டுகிறார்கள், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் மற்றும் ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மேலும், சகோதரர்கள் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி ராக்கி கட்டுகிறார்கள். அந்த நேரத்தில் ஒரு மூத்த சகோதரர் அல்லது இளைய சகோதரர் தனது சகோதரியை எல்லா விஷயங்களிலும் பாதுகாப்பதாக சபதம் செய்கிறார். பின்னர் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இத்திருவிழா ஆண்டுதோறும் சிராவண மாதம் பூர்ணிமா திதியில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தற்போது ராக்கி பூர்ணிமா இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) நாடுமுழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சகோதரிகள் ராக்கி கட்டுவதைத் தவிர சில விஷயங்களைச் செய்வதன் மூலம் தங்கள் சகோதரர்களுடன் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தலாம். மேலும், இது சகோதரனின் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
இந்த நிலையில், ரக்சா பந்தன் பண்டிகை ஒட்டி அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், இன்னும் பலவேறு துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதேபோல், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி வாழ்த்து
"சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமாக இருக்கும் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனித பண்டிகை உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்." என்று வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திரௌபதி முர்மு வாழ்த்து
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ரக்சா பந்தனின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதர சகோதரிகளுக்கிடையேயான அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான இந்த திருவிழா, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது. இந்த பண்டிகை நாளில், நமது சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்ய அனைத்து நாட்டு மக்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“