Ram Navami 2024 Celebration: மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே உன்னதமானதும் மனித வாழ்வுக்கு நெருக்கமானதும் என்று போற்றப்படுவது, ராமாவதாரம்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார் என்கிறது புராணம். அதேசமயம் பங்குனி மாதத்திலும் அவதரித்த தினம் வரும்.
Ram Navami 2024 Date
பஞ்சாங்கத்தின் அடிப்படையில், பங்குனி மாதம் அமாவாசை முடிந்து, வளர்பிறை நவமி திதி ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை 5. 46 மணிக்குத் தொடங்கி, நவமி திதி ஏப்ரல் 17 மாலை 6. 59 மணிக்கு நிறைவடைகிறது.
உதயதிதியின் அடிப்படையில், ராம நவமி விழா ஏப்ரல் 17, 2024 அன்று கொண்டாடப்படுகிறது. அன்று காலை 10. 30 முதல் மதியம் 11. 30 மணி வரை ஸ்ரீ ராமரை வழிபடுவதற்கான உகந்த நேரம் ஆகும். காலையில் 7.30 முதல் 9 மணி வரை எமகண்டம் இருப்பதால், காலை 7. 30 மணிக்கு முன்பாக ராமநவமி பூஜை செய்யலாம் அல்லது 9 மணிக்கு மேல் துவங்கலாம்.
Ram Navami History and Significance
தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இந்தக் காலகட்டத்தில், மனைவி சீதையையும் பிரிந்தார். ஸ்ரீராமர், தன் மனைவியை மட்டும் விரும்பவில்லை. தர்மத்தை விரும்பினார். தர்மத்தின்படி வாழ்ந்தார்.
பெற்ற தாய் தந்தையிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சகோதரர்களிடம் எப்படி அன்பும் பிரியமுமாக இருக்க வேண்டும்? அரசன் என்பவன், எப்படி ஆளுமை மிக்கவனாக இருக்கவேண்டும்? நண்பர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்கிற அனைத்துக்கும் விடை இருக்கிறது ராமாயணத்தில்.
மனைவியானவள் கணவரிடமும் கணவன் என்பவன் மனைவியிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சீதையும் ராமனுமே சாட்சி.
இப்படி ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது.
ராமநவமி வழிபாடு
ராம நவமி நாளில், அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜை அறையை சுத்தம் செய்து, ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் படங்களுக்கு சந்தனம், தூபம், மலர்கள் வைத்து பூஜை செய்யுங்கள்.
ராமநவமி நாளில் துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது பல உன்னதங்களையும் விசேஷங்களையும் தந்தருளும்.
அன்று பெரும்பாலான இல்லங்களில், நீர்மோர், பானகம் மற்றும் ஊறவைத்த பாசிப்பருப்பு ஆகியவை நெய்வேத்தியமாக படைக்கப்படும். ஸ்ரீ ராம நவமி அன்று விரதம் இருப்பவர்கள், காலையில் பூஜை செய்து இந்த உணவுகளை சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம். அருகில் உள்ள கோயில்களில் ராம நவமி சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ளலாம்.
பூஜையறையில் அமர்ந்து, ராம நாமங்களைச் சொல்லச் சொல்ல, உங்கள் இல்லத்தில் பல நல்ல நல்ல விஷயங்களை நடத்தித் தந்தருள்வார் ராமபிரான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“