ரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை!

ரமணர் தன் இளம் பிராயத்தில் தங்கி இருந்த அவரது சித்தப்பா வீடு மதுரை மீனாட்ஷி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரம் அருகே அமைந்துள்ளது.

ரமண மகரிஷி சிறுவராக இருந்த போது, ‘அருணாசலம்’ என்கிற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு குறித்து முந்தைய கட்டுரையில் எழுத்தாளர் அ.பெ.மணி விவரித்தார். ரமண மகரிஷி தொடர்பான அனுபவங்களை தொடர்ந்து, தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர்களுடன் பகிர்கிறார்!

அ.பெ.மணி

பால்ய வயதில் ரமணர் நன்றாக தூங்குகின்ற பழக்கம் உடையவர். அவர் தூங்கின்ற போது யாரேனும் அவரை தாக்கினால் கூட தெரியாத அளவிற்கு உறங்குவாராம். ஒருமுறை சித்தப்பா வீட்டில் தனியாக இருந்த ரமணர் வீட்டை உட்புறமாக பூட்டிவிட்டு தூங்கி விட்டார், உறவினர்கள் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய உடன் தூங்குகின்ற ரமணரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.

கதவை உடைக்கிற அளவிற்கு தட்டியும் ரமணர் எழுந்து வர வில்லை, பிறகு எப்படியோ அண்டை வீட்டார் உதவியுடன் வீட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரமணர் காலையில் தான் விழித்தார்.

ரமண மகரிஷியும் மீனாட்சி அம்மன் கோவிலும்!

ரமணர் தன் இளம் பிராயத்தில் தங்கி இருந்த அவரது சித்தப்பா வீடு மதுரை மீனாட்ஷி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரம் அருகே அமைந்துள்ளது. இந்த வீட்டில் தங்கி இருந்த நாட்களில் தான் அவர் மரணம் என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பி விடை காண முயன்றார். மாடி அறை ஒன்றில் தனது மரணத்தை தானே உருவகம் செய்து பார்த்தார் ரமணர்.

அந்த கணத்தில் அவரது மெய்யுணர்வு விழிப்பு பெற்றது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என ரமணர் விளக்குகின்றார். ஆன்மீக ஞானிகளில் வெகு சிலரே ரமணர் போல தனது ஆன்மீக அனுபவத்தினை தெளிவாக விளக்குகின்றனர். மெய்யன்பர்கள் ரமணரிடம் வியக்கின்ற விஷயங்களில் இதுவும் ஒன்று.

அதுவரை விளையாட்டுப் பிள்ளையாக இருந்த ரமணர் பெரிதாக மாறிப்போனார். நண்பர்களுடன் விளையாடும் நேரம் குறைந்து போனது. முன்பெல்லாம் நண்பர்கள் சீண்டினால் உடனே பதிலடி கொடுக்கின்ற ரமணர் ஆன்ம அனுபவத்திற்குப் பிறகு எது நடந்தாலும் யார் கேலி செய்தாலும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

பெரும்பாலான நேரத்தினை தனிமையில் கழிக்கத் தொடங்கினார். பெரியவர்களிடம் பணிவும் தாழ்மையும் காட்டத் தொடங்கினார். உணவு விசயத்தில் அது பிடிக்கும், இது பிடிக்கும் என வேண்டி சாப்பிட்ட ரமணருக்கு இப்போது ஏதோ ஒன்றை சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம் வந்து விட்டது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அருகில் வீடு இருந்ததால் அவ்வப்போது நண்பர்களுடன் கோவிலுக்கு போகின்ற வழக்கம் ரமணருக்கு உண்டு. திருநீறு, குங்குமம் வாங்கி பூசி விட்டு சிலைகளை, கோபுரத்தை, மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி அப்போது ரமணர் போய் வருவார்.

ஆன்ம விழிப்பு ஏற்பட்ட பின்னர் நிலைமை முற்றாக மாறி விட்டது. பெரும்பாலும் மாலை வேளைகளில் கோவிலுக்குப் போய் வர ஆரம்பித்தார். ஈசன், அம்பிகை அல்லது சிவனடியார் சன்னதி முன்னால் நீண்ட நேரம் அமர்ந்தபடி அல்லது நின்றபடி கண்களில் நீர் பெறுக இறைவனை துதிக்க ஆரம்பித்தார். சிவனடியார்கள் போல தானும் உள்ளம் உருகி பக்தி பெருகி இறைவனை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

பிரம்ம ஞானத்தில் அப்போதே தான் திளைக்கத் தொடங்கி விட்டதாகவும் ஆனால் அது இன்னதென தெளிவாக அறிய முடியாமல் அந்த ஆன்ம விழிப்பை தான் மதுரையில் அனுபவித்ததாகவும் ரமணர் பின்னர் குறிப்பிடுகின்றார்.

ரிஷி மூலம் நதி மூலம் அறிய முடியாது என்பர் பெரியோர். திருவண்ணாமலையை அடைந்த பின்னர் தன்னைக் காண வரும் பக்தர்களிடம் ரமணர் தனது மதுரை நாட்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பல்வேறு இடங்களில் படிக்கக் கிடைக்கிறது. ஆன்மீகப் பாதையில் பயணிக்க விரும்பும் ஆரம்பகால சாதகர் யாருக்கும் ரமணரின் மதுரை வாழ்வு நல்வழி காட்டும் மெய் விளக்கு. (தொடர்ந்து பயணிப்போம்)

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close