அ.பெ.மணி
குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது.
அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு வைத்துவிட்டு திருவண்ணாமலை நோக்கிய தனது பயணத்தை தொடர திட்டமிட்டார்.
முத்து கிருஷ்ண பாகவதர் என்பவரது இல்லத்தை கடுக்கன் அடகுவைக்கும் நோக்கத்தோடு அணுகினார். பாகவதர் துணைவியார் சிறுவனை உள்ளே அழைத்து கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் பலகாரங்களை கொடுத்து நன்றாக சாப்பிட வைத்தார்.
பாகவதர் கடுக்கணை பெற்றுக்கொண்டு நான்கு ரூபாய் பணம் கொடுத்தார். தன்னுடைய விலாசத்தை ஒரு சிறு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அதேபோல சிறுவனது விலாசத்தையும் பெற்றுக் கொண்டார். மதிய உணவளித்து முத்துக்கிருஷ்ணன் பாகவதரின் மனைவி சிறுவனை வழியனுப்பி வைத்தார்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை ரயிலைப் பிடித்து திருவண்ணாமலை வந்து சேர்ந்த வெங்கடராமன் நேராக ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கினார்.
இறைவனை... தனது தகப்பனை... அருணாச்சலத்தை வணங்கிவிட்டு வந்த வெங்கடராமன் மொட்டை அடித்துக்கொண்டு மிகக்குறைவான துணிகளை உடுத்திக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தார். சேஷாத்திரி சுவாமிகள் அவரை நன்றாக கவனித்துக்கொண்டார்.
பாலகனாக வெங்கடராமன் தவத்தில் இருக்கின்ற போது பள்ளிக்கூடம் செல்லக்கூடிய சிறுவர்கள் அவர் மீது சிறு கற்களை எறிவதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர். அப்போதெல்லாம் அங்கே இருக்கக்கூடிய மூத்த சன்னியாசிகள், பாலசுவாமி ஆகிய சிறுவனை பாதுகாத்து வந்தனர்.
ஆலயத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தவம் செய்த சுவாமி பின்னர் பாதாள லிங்கம் என்று அழைக்கப்படக்கூடிய இடத்தில் அமர்ந்து தனது தியானத்தைத் தொடர்ந்தார். அவ்வப்போது சேஷாத்திரி சுவாமிகள் வந்து இவரை பார்வையிட்டுச் செல்வது வழக்கம்.
பாதாள லிங்கம் வெளிச்சம் ஏதும் இல்லாமல் மெல்லிய ஈரப்பதம் கொண்ட பகுதியாக இருந்தது. புறச் சூழலில் இருந்த குறைபாடுகள் எதுவும் ரமணருக்கு பெரியதாகப் படவில்லை. தனது தியானத்தை தொடர்ந்தபடியே இருந்தார். நீண்ட நேரம் அமர்ந்து இருந்த காரணத்தினாலும், ஈரப்பதம் கொண்ட தரையாலும் அவரது தொடை பகுதியில் புண்கள் ஏற்பட்டன.
இந்த காலகட்டத்தில் வெங்கடராமனை பிராமண சுவாமி என்றே அங்கே அழைத்தனர். வெங்கடாசலம் என்ற அன்பரிடம் சேஷாத்திரி சுவாமிகள் ரமண மகரிஷி பற்றி சொல்லி பாதாள லிங்கத்திற்கு சென்று பார்வையிடச் சொன்னார். வெங்கடாசலம் பிராமண சுவாமியை பாதாள லிங்கத்தில் இருந்து அழைத்து வந்து கோபுர சுப்பிரமணியர் ஆலயத்தில் உட்கார வைத்தார்.
நீண்ட நேரம் மௌனமாக தவம் செய்த படியே இருந்த சுவாமிகளின் புகழ் பக்தர்களிடையே பரவத்தொடங்கியது. ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் ரமண மகரிஷியை வந்து பார்வையிட்டு தரிசனம் செய்ய ஆரம்பித்தனர்.
பக்தர்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் அவரை நோக்கி சீடர்களும் வரத்தொடங்கினர்.
வேதங்களை முறையாகக் கற்ற உத்தண்டி நாயனார் என்பவர் அவரைத் தேடி வந்தார். என்னதான் வேதங்களை கற்று இருந்தாலும் இதுபோன்ற மெஞ்ஞானி ஒருவரிடமே தனக்கு பதில் கிடைக்கும் என்று அவர் நம்பி ரமணரை பின்தொடர்ந்தார்.
அண்ணாமலை தம்பிரான் என்பவர் திருவண்ணாமலை வீதிகளில் தனது சிஷ்யர்களுடன் பக்தி பண்ணிசைத்து பாடி வருவார். மக்கள் தானமாக தருபவற்றை பெற்று குரு மூர்த்தம் என்ற தனது ஆதீன குருவின் சமாதி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் நடத்தி வந்தார்.
உத்தண்டி நைனார் போலவே அண்ணாமலை தம்பிரானும் ரமண மகரிஷியின் அருளால் ஈர்க்கப்பட்டு அவரை பின்தொடர்வது என முடிவு செய்தார். ஆலயத்தில் மோன நிலையில் அமர்ந்திருக்கின்ற பகவானை நிறைய பக்தர்கள் வந்து தேவையில்லாமல் தொல்லை கொடுப்பதாக நினைத்தனர்.
குருமூர்த்தம் பகுதிக்கு அழைத்துச் சென்றுவிட்டால் இயற்கையான சூழலில் பகவானால் நீண்ட நேரம் தவம் செய்ய முடியும் என்று எண்ணி பிராமண சுவாமியை திருவண்ணாமலையின் புறநகர்ப் பகுதியான குரு மூர்த்தத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே பக்தர்களின் வருகை சற்று குறைவாகவே இருந்தது. பகவான் தனது தவத்தை தொடர்ந்தார். (தொடர்ச்சி, வெள்ளிக்கிழமை)
(ரமண மகரிஷி குறித்து எழுத்தாளர் அ.பெ.மணி எழுதும் தொடரின் 4-ம் பாகம்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.