ரமண மகரிஷி: சிறுவனாக இருந்த வெங்கட்ராமன் ஒரு மகானாக உருமாறுவதற்கு அடிப்படையாக அமைந்த ஒற்றைச் சொல் குறித்து விவரிக்கிறார் அ.பெ.மணி.
அ.பெ.மணி
வெங்கடராமன் தான் பிறந்த திருச்சுழியை விட்டு மதுரையில் தனது சித்தப்பா வீட்டில் வசித்து வந்த சமயம் அது. அமெரிக்கன் மிஷன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார்.
உறவினர் ஒருவர் மதுரை வந்தார்! 'எங்கிருந்து வருகின்றீர்கள்?' என அவரிடம் கேட்டார் வெங்கடராமன்.
'அருணாச்சலத்திலிருந்து' என பதிலுரைத்தார் வந்தவர். அருணாச்சலம் என்ற சொல் சிறுவன் வெங்கட்ராமனின் மனதில் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருந்த மெய்யுணர்வு.
அருணாச்சலம், அது எங்கே இருக்கின்றது? எனக் கேட்டார் வெங்கட்ராமன். விழுப்புரம் பக்கத்தில் இருக்கின்ற திருவண்ணாமலை தான் அது என்றார் உறவினர்.
இதே நேரத்தில் அவரது சித்தப்பா வாசித்து கொண்டிருந்த பெரிய புராணம் புத்தகம் அவரது கண்ணில் படுகிறது, அதை கையில் எடுத்த வெங்கடராமன் பெரிய புராணத்தை முழுவதுமாக படிக்கின்றார். நாயன்மார்களின் பக்தியும், தவமும் அவரது மனதை தொடுகின்றன. அருணாச்சலம் என்ற சொல், பெரிய புராணம் நூல் இரண்டின் தாக்கத்தில் இருந்து வெங்கட்ராமன் விடுபடவே இல்லை.
இத்தகைய சூழலில் மரணம் என்றால் என்ன? என்ற கேள்வி சிறுவன் மனதை ஆட்கொள்கிறது. ஒரு நாள் தான் தங்கி இருந்த சித்தப்பா வீட்டின் மாடியில் சென்று பிணம் போல படுத்துக் கொண்டு மரணம் அடைந்து விட்டால் என்னென்ன நடக்கும் என கற்பனை செய்கின்றான்
உறவினர் கூடி அழுது உடலை எரித்து விடுவார்கள். ஆனால் அதன் பின்னும் அழியாத ஒன்று இருப்பதை சிறுவனின் ஆழ்மனம் கண்டடைகிறது. தான் இங்கே மதுரையிலே இருப்பதை காட்டிலும் திருவண்ணாமலை போவதே சிறந்தது என்ற முடிவிற்கு வெங்கட்ராமன் வருகின்றார். தனது தகப்பனை தேடி செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பிய சிறுவன் வெங்கட்ராமன் தான் பகவான் ரமணராக பின்னர் அறியப்பட்டார்.
122 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 1 ம் தேதி வெங்கட்ராமன் திருவண்ணாமலையை வந்து அடைந்தான். திருவண்ணாமலையில் தான் அடைந்த உணர்வு எத்தகையது என்பதை, 'அறிவறு கிரியென வமர் தருமம்மா
வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு'
என தொடங்குகின்ற அருணாச்சல அஷ்டகம் பாடலில் விளக்குகின்றார் பகவான்.
'இது என்ன அதிசயம்? சாதாரண குன்றாக அது நிற்கிறது, இதன் பெருமை அறிவது யாருக்கும் அரிது. ஆனால் சிறுவயது முதலே அருணாச்சலம் என்பது மிக பெரியது என உணர்வேன். இந்த அருணாச்சலம், திருவண்ணாமலை என சொல்லக் கேட்ட போது எனக்கு அதன் பொருள் முழுமையாக விளங்க வில்லை. அது என்னை அருகில் ஈர்த்த போது நான் பெற்ற தெளிவு என்றென்றும் நீங்காது.'
திருச்சுழியில் பிறந்த சிறுவன் மதுரையில் தான் பெற்ற மெய்யுணர்வை தேடி திருவண்ணாமலையை அடைந்தது கடந்த நூற்றாண்டின் பெரிய ஆன்மீக நிகழ்வு!
(கட்டுரையாளர் அ.பெ.மணி, கல்வியாளர்- விமர்சகர் என பன்முக ஆளுமை!)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.