ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த உத்திரகோசமங்கையில் மங்களநாதசாமி கோயில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சிலையும் உள்ளது. இந்த கோயில் திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இங்கு வரும் மார்கழி 18ஆம் தேதி, ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது ஒரு நாள் மட்டும் நடராஜருக்கு சந்தனக்காப்பு களைக்கப்பட்டு அவருடைய மரகத மேனியை மக்கள் தரிசனம் செய்வர். இதையடுத்து இந்த விழா முடிந்ததும் அவருக்கு சந்தனம் பூசப்பட்டு மீண்டும் அடுத்த ஆருத்ரா வரும் வரை அந்த சந்தனக் காப்பில் நடராஜர் இருப்பார். இதை காண தமிழகத்திலிருந்து பல்வேறு பக்தர்கள் வருகை தருவார்கள்.
தற்போது இந்த கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் புறப்பட்ட போது திடீரென மழை பெய்தது. உடனே ஆட்சியரின் உதவியாளர் குடை பிடித்தபடி, அவர் நனைந்து கொண்டு வந்தார். இதை பார்த்த ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உடனே குடையை வாங்கி உதவியாளர் நனையாமல் இருக்க அவருக்கும் சேர்த்து குடையை பிடித்தார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், அதற்கு அடுத்ததாக உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் கணவன், மனைவியான விஷ்ணு சந்திரன் மற்றும் ஆஷா அஜித் ஆகியோரை மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு கடந்த மே மாதம் நியமித்தது கவனத்தை ஈர்த்தது.
விஷ்ணு சந்திரன் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நாகர்கோவில் துணை ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பரமக்குடியில் வருவாய் கோட்டாட்சியராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“