தமிழக அரசு சார்பில் கல்வி, வேலைவாய்ப்பு, ஆன்மிகம் உள்ளிட்டவற்றில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பிலும் கோயில்களில் குடமுழக்கு நடத்துவது, அன்னதான கட்டடங்கள், ரோப் கார் வசதி உள்ளிட்ட பணிகள் பல்வேறு கோயில்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வரிசையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், இலவச ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டமும் ஒன்றாகும். ஏற்கனவே சுற்றுலாத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து ஆடி அம்மன் சுற்றுலா திட்டம், புரட்டாசி மாதத்தையொட்டி, பெருமாள் கோயில்களுக்கு சுற்றுலா என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதையடுத்து, அரசு சார்பில் ராமேஸ்வரம் முதல் காசிக்கு இலவச ஆன்மிக பயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டு 200 பேரும், 2023-24 ஆம் ஆண்டு 300 பேரும் இந்த ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது 2024-25 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல, தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 21 நபர்கள் வீதம் 420 நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும். முக்கியமாக 60 - 70 வயதுக்கு உட்பட்டவராகவும் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் இருந்தோ அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற வலைத்தளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி பூர்த்தி செய்து படிவங்களை உரிய இணைப்புகளுடன் அடுத்த மாதம் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசியில் தரிசனம் முடிந்து மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாத சுவாமியை தரிசனம் செய்த பின்னரே நிறைவுபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.