இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சாதி மத பேதமின்றி, இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில், கோவையில் மட்டுமே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ரம்ஜான் ஸ்பெஷல் பூசணி மிட்டாய் அல்வா பலராலும் விரும்பப்படுகின்றன. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்திற்கு தரும் இனிப்பு பண்டமாக இருக்கின்றன. கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக, 50 வருடமாக இந்த பூசணிக்காய் மிட்டாய் அல்வாவை தயார் செய்து வருகின்றார்கள்.
இந்த பூசணிக்காய் மிட்டாய் அல்வாவை திருநங்கைகள் மட்டுமே பக்குவமாக தயார் செய்கின்றார்கள். ஒரு வாரத்திற்கு முன்பாக வெண்பூ சணிக்காயை அறுத்து, 3 நாட்களுக்கு வேகவைத்து, அந்த பூசணிக்காயில் உள்ள தண்ணீரை வடிகட்டி நீக்கி விடுவார்கள். பின்பு அதனோடு பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, நெய், அத்திப்பழம், இனிப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேர்ப்பார்கள்.
பக்குவமாக தயாரிக்கப்படும் இந்த பூசணிக்காய் மிட்டாய் அல்வா மருத்துவ குணமுடையது. இதனை உட்கொள்வோருக்கு சிறுநீரகம் மற்றும் இருதய கோளாறு நீங்குதல், குழந்தை பாக்கியம் கிடைத்தல் உள்ளிட்டவை இதன் சிறப்பு என இதனை தயாரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். கோவையில் உள்ள சக நண்பர்களுக்கு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வழங்கி வருவதோடு மட்டுமின்றி துபாய், கத்தார், சவுதி, ஸ்ரீலங்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கும் விமானத்தில் அனுப்பி வருகின்றனர். ஒரு கிலோ 450 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பூசணிக்காய் மிட்டாய் அல்வா இன்னும் 2 நாளில் விற்பனைக்கு வர இருக்கின்றன.
இந்த பூசணிக்காய் மிட்டாய் அல்வா விற்பனை வாயிலாக பெறப்படும் வருமானம் ஏழை குழந்தைகளின் கல்வி, ஏழை எளிய பெண்களின் திருமண உதவி, ஏழை எளியவரின் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பூசணிக்காய் மிட்டாய் அல்வாவை போல அவர்களையும் சேவையும் சேர்ந்தே இனிக்கிறது என்றால் அது மிகையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை