எல்லோரும் எளிதாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்வீட் என்றால் அது கேசரிதான். பெரும்பாலான விருந்துகளில் பண்டிகை உணவுகளில் தவறாமல் இடம் பெறுவது கேசரி.
அதுமட்டுமல்ல, வீட்டுக்கு திடீரென விருந்தினர் வந்துவிட்டால் வீட்டில் ரவை, சர்க்கரை, முந்திரி, சிறிது நெய் இருந்துவிட்டால் போதும் சீக்கிரமாக கேசரி செய்துவிடலாம். இந்த புத்தாண்டை இனிமையாகத் தொடங்க ஹோட்டல் டேஸ்ட்ல ரவா கேசரி செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
ரவா கேசரி செய்வது ரொம்ப எளிதானதுதான். ஆனால், அதை பக்குவமாக செய்ய வேண்டும் அதுதான் முக்கியம். அப்படி இந்த புத்தாண்டுக்கு ரவா கேசரி எப்படி பக்குவமாக ஹோட்டல் டேஸ்ட்ல செய்வது எப்படி என்று ஐஇ தமிழ் உங்களுக்கு வழிகாட்டுகிறது.
கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
1. ரவை – 1 கப்
2. சர்க்கரை – 1 கப்
3. தண்ணீர் – 3 கப்
4. ரீஃபைண்ட் ஆயில் – 50 மி.லி
5. நெய் – 50 மி.லி
6. கலர் பவுடர் – 1 சிட்டிகை
7. தேவையான அளவு முந்திரி
8. தேவையான அளவு ஏலக்காய் தூள்,
9. தேவையான அளவு உலர் திராட்சை
குறிப்பு: 1. கேசரிக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. ரீஃபைண்ட் ஆயில்தான் பயன்படுத்த வேண்டும்.
2. உங்களுக்கு கலர் பவுடர் தேவை என்றால் விருப்பமான கலரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கேசரி செய்முறை:
1.
முதலில் அடுப்பில் ஒரு வானலியை வைத்து 1 ஸ்பூன் அளவு நெய் விட்டு, முந்திரி பருப்பு, உலர் திராட்சைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
2.
பின்னர், அந்த வானலியில் மீண்டும் 1 மேசைக் கரண்டி அளவு நெய் ஊற்றி, ரவையை போட்டு வாசனை வருகிற வரை சிவக்க வறுக்க வேண்டும். அதை எடுத்து, ஒரு தட்டில் எடுத்து மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
3.
இதையடுத்து, 1 கப் ரவைக்கு, 3 கப் தண்ணீரை எடுத்து அந்த வானலியில் ஊற்ற வேண்டும். அந்த தண்ணீருடன் எடுத்து வைத்திருக்கும் 50 மி.லி எண்ணெயையும், 50 மி.லி நெய்யையும் முக்கால் பாகம் ஊற்றி விடுங்கள். இறுதியாக ஊற்றுவதற்காக, கொஞ்சம் நெய்யை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
4.
தண்ணீர் எண்ணெய் நெய் மூன்றும் ஒன்றாக சேர்ந்து தளதளவென கொதித்து வந்ததும் வறுத்து வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டி கட்டி பிடிக்காமல் கலந்துவிட வேண்டும். வறுத்த ரவை தண்ணீரை உடனே ஈர்த்துக்கொள்ளும். எனவே, ரவை வேகாது என்று பயந்து விடாதீர்கள்.
5.
இப்போது அடுப்பில் அனலை குறைத்து மெல்லியதாக வைத்தக்கொண்டு ஒரு மூடி விட்டால் 5 நிமிடத்தில் சூப்பராக வெந்து இருக்கும். அதன் பிறகு, 1 கப் சர்க்கரையை, ரவையோடு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
சர்க்கரை கொட்டிய பின்பு, ரவை வேகாது என்பதால்தான் சர்க்கரையை ரவை வெந்த பிறகு கொட்ட வேண்டும் என்கிறோம்.
இனிப்பு அதிகமாக வேண்டும் என்றால் கூடுதலாக 1/4 கப் அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம். ரவையுடன் சர்க்கரையை சேர்த்து கலக்கும்போது, சர்க்கரை உருகி ரவை கேசரி அல்வா பதத்திற்கு வந்துவிடும். அப்போது, கைவிடாமல் கிளறி, இறுதியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சை ஏலக்காய் பொடி போட்டு, ரவை கேசரி நன்றாக கிளறிவிட வேண்டும்
6.
இறுதியாக மீதம் இருக்கும் நெய்யை மேலே ஊற்றி விட்டால் போதும். தளதளவென அல்வா பதத்துக்கு ரவை கேசரி தயாராகிவிடும். அவ்வளவுதான் ரவா கேசரியை எடுத்து நீங்கள் விரும்பியபடி முந்திரி பருப்பு வைத்து அழகாக அலங்காரம் செய்து சாப்பிடலாம்.
இந்த அழகான இனிமையான திடமான சுவையான கேசரி உங்களுக்கு மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். கேசரி உங்களுடைய இந்த புத்தாண்டை மேலும் இனிமையாக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"