/indian-express-tamil/media/media_files/2025/09/08/dogs-2025-09-08-15-05-03.jpg)
அண்மைக் காலமாக தெரு நாய்களின் அச்சுறுத்தல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. செய்தித் தாள்களில் தினமும் ஏதாவது ஒரு மூலையில் 'நாய் கடித்ததால்... ' என்ற செய்தி இடம்பெற்று வருகிறது. நாய் என்றால் கடிக்கத்தானே செய்யும் என்று எளிதாகக் கடந்து போக முடியாது, ஏனெனில் கடித்து விட்டால் அதன்பின் வரும் சிக்கல்கள் ஏராளம். ஆனால், நாய்கள் எப்போது நம்மை கடிக்க முயற்சிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், அவற்றை எளிதாகச் சமாளிக்க முடியும். ஒரு நாய்க்கும் நமக்கும் இடையேயான தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என பேராசிரியர் சேகர் ஆவுடையப்பன் டாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஒரு நாயைப் பார்க்கும்போது அதன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். நாம் மனிதர்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது மரியாதையான செயல். ஆனால், நாய்களுக்கு இது ஒரு அச்சுறுத்தலாகத் தோன்றலாம். நீங்கள் அதன் கண்களை நேரடியாகப் பார்த்தால், 'என்னுடன் மோதுகிறாயா?' என்று அது நினைத்து, உங்களைத் தாக்க வரலாம். எனவே, நாய் அருகில் வரும்போது அதன் கண்களைப் பார்க்காமல், வேறு திசையை நோக்கி அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்.
ஒரு நாய் உங்களைத் துரத்த ஆரம்பித்தால், உடனடியாக பயந்து ஓடாதீர்கள். அப்படிச் செய்தால், அது ஒரு வேட்டையாடும் விளையாட்டாக மாறிவிடும். நாய்கள் இயல்பாகவே ஓடும் விலங்குகளை விரட்டிப் பிடிக்கும் குணம் கொண்டவை. எனவே, நாய் துரத்தும்போது திடீரென நின்றுவிட்டால், அது குழப்பமடைந்து, உங்களை விட்டுப் போகும் வாய்ப்பு அதிகம். ஒரு நாய் குழந்தையைக் கடிக்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் அந்த நாய் கெட்டது என்பதல்ல, மாறாக அதற்கு அச்சம் ஏற்படுகிறது. ஒரு குழந்தை கீழே விழுந்து, மீண்டும் எழுந்து நிற்க முயற்சிக்கும்போது, அதன் கைகளும் கால்களும் வேகமாக அசைந்து கொண்டிருக்கும்.
நாயின் கண்களுக்கு, இந்த அசைவுகள் ஏதோ தன்னைத் தாக்க வரும் செயல் போலத் தோன்றும். உடனே தன்னைத் தற்காத்துக்கொள்ள அது குழந்தையைக் கடிக்க முற்படுகிறது. ஆகவே, நாய்கள் இருக்கும் இடத்தில் குழந்தைகள் வேகமாக விளையாடுவதைத் தவிர்க்கச் சொல்லலாம். இந்த எளிய மூன்று விஷயங்களைப் புரிந்துகொண்டால், தெரு நாய்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வது மட்டுமல்ல, தேவையற்ற கடிபடும் சம்பவங்களையும் நம்மால் தவிர்க்க முடியும் என்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.