/indian-express-tamil/media/media_files/2025/09/20/download-57-2025-09-20-10-54-15.jpg)
நடிகர் ரோபோ சங்கரின் மரணம் திரையுலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை என்பது ஒரு மனிதனின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை. இதன் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் சரியான சிகிச்சை முறைகள் குறித்து நாம் விரிவாக அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
தோலும் கண்களும் மஞ்சள் நிறம் காணப்படும் முக்கிய காரணமாக பிலிரூபின் என்ற நிறப்பொருளின் அதிகம் சுரப்பு குறிப்பிடப்படுகிறது. இது கல்லீரல் செயலிழப்பு, இரத்த அணுக்கள் முற்றிலும் முறிவு அடைவது, அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்ற உடல்நல குறைபாடுகளுக்கான எச்சரிக்கையாக இருக்கலாம். ஹெபடைடிஸ் ஏ என்ற வைரஸ் (HAV) காரணமாக ஏற்படும் இந்தக் கல்லீரல் தொற்று, ஒருவருக்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையில் நீடிக்கக்கூடியதாகும். சமீப காலமாக இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், இதைப் பற்றிய விழிப்புணர்வும், தடுப்பு நடவடிக்கைகளும் மிக முக்கியமானதாக இருக்கிறது.
பொதுவான அறிகுறிகள்
காய்ச்சல், சோர்வு, குமட்டல்
மேல் வயிற்று வலி
கருமையான சிறுநீர்
தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்
மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள்
கல்லீரல் தொற்றுகள் (ஹெபடைடிஸ் A-E)
ஹெபடைடிடிஸ் ஏ முதல் ஈ வரை மற்றும் சிரோசிஸ், ஆட்டோஇம்யூன் கல்லீரல் கோளாறுகள் போன்ற கல்லீரல் தொற்றுகள் கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இவை பிலிரூபின் என்ற உடற்கூறின் செயலாக்கத்தில் கோளாறு ஏற்படுத்தி, இரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் தோலும் கண்களும் மஞ்சளாகும்.
சிவப்பு இரத்த அணுக்களின் முறிவு (ஹீமோலிசிஸ்)
ஹீமோலிசிஸ் என்பது சில காரணங்களால் சிவப்பு இரத்த அணுக்கள் வேகமாக அழியும்போது ஏற்படும் நிலையாகும். இது பிலிரூபின் உற்பத்தியை அதிகரித்து, கல்லீரலால் அதைச் செயலாக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. மருந்து எதிர்வினைகள் மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் இதற்கான முக்கிய காரணங்களாகும்.
பித்த நாளங்களில் அடைப்பு
பித்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, பிலிரூபின் செரிமானத்தைத் தடை செய்கிறது. பித்தக்கற்கள், கட்டிகள் அல்லது வீக்கம் போன்றவை பித்தம் வெளியேறும் வழியை தடுக்கின்றன. இதனால் பிலிரூபின் இரத்தத்தில் அதிகரித்து கடுமையான மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
மது தொடர்பான கல்லீரல் பாதிப்பு
நீண்ட காலமாக அதிக அளவில் மதுப் பொருள் குடிப்பதால் கல்லீரல் செல்கள் சேதமடைந்து, வீக்கம் மற்றும் சிரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இது பிலிரூபின் செயலாக்கத்தைக் குறைத்து, இரத்தத்தில் அதன் அளவை உயர்த்தி மஞ்சள் காமாலை உருவாக்குகிறது.
மருந்துகள், நச்சுகள் மற்றும் பிற காரணங்கள்
அசெட்டமினோஃபென், ஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகள் மற்றும் நச்சுப் பொருட்கள் கல்லீரலை நேரடியாக சேதப்படுத்தலாம். இவை கல்லீரல் செல்களை வீங்கச் செய்யலாம். மேலும், மரபணு மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், மற்றும் சில புற்றுநோய்கள் ஆகியவை பிலிரூபின் செயல்பாட்டை பாதித்து மஞ்சள் நிறம் தோன்றச் செய்யும்.
எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது?
ஹெபடைடிஸ் A மற்றும் மஞ்சள் காமாலை போன்ற தொற்றுகளை எளிதாகத் தடுக்க முடியும். இதற்காக, ஹெபடைடிஸ் A தடுப்பூசியை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதும் பயனுள்ளதும் ஆகும். மேலும், கொதிக்கவைத்த நீர் அல்லது பாட்டிலில் கிடைக்கும் நீரையே குடிக்க வேண்டும்; நன்றாக வேகாத உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவு தயாரிப்பதற்கும், கழிப்பறைக்குப் பிறகும் சோப்பால் கைகளை கழுவுவது அவசியம்.
குழந்தைகள் மற்றும் முதியோருடன் இருப்பின் கூடுதல் கவனம் தேவை. கிருமித்தொற்றைத் தவிர்க்க, பாத்திரங்கள் மற்றும் உணவுகளை நோய்வாய்ப்பட்டவர்களுடன் பகிர வேண்டாம். ஆரம்ப நிலையில் விழிப்புடன் இருந்தால், இந்த தொற்றுகளால் ஏற்படும் பெரும்பாலான சிக்கல்களை தவிர்க்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.