Recipe News In Tamil Small Onion Poondu Kulambu: சின்ன வெங்காயம் எனப்படுகிற சாம்பார் வெங்காயம், நம் உடலுக்கு தேவையான ஒரு முக்கிய உணவுப் பொருள். இதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, ஜலதோஷம், தொண்டை கரகரப்பு பிரச்னைகள் என பலவற்றுக்கு சின்ன வெங்காயம் பெரும் தீர்வு.
சின்ன வெங்காயத்தை சாம்பாரில் இணைத்துச் சாப்பிடுவது, பச்சையாக சாப்பிடுவது என பயன்படுத்துவோம். அதேபோல சின்ன வெங்காயம்- பூண்டு குழம்பு வைத்துப் பாருங்கள்! இதன் நன்மைகளும் அதிகம்; டேஸ்டியாகவும் இருக்கும். சின்ன வெங்காயம்- பூண்டு குழம்பு எப்படி வைப்பது? எனப் பார்க்கலாம்.
சின்ன வெங்காயம்- பூண்டு குழம்பு
சின்ன வெங்காயம்- பூண்டு குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்: சின்ன வெங்காயம் – 50 கிராம், பூண்டு – அரை கப், வெந்தயம் – 1/2 டீ ஸ்பூன், வரமிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, சாம்பார் பொடி – 1/2 டீ ஸ்பூன், பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை, தக்காளி – 1, கடுகு – 1/2 டீ ஸ்பூன், புளி – 1 எலுமிச்சை அளவு, எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, சீரகம் – 1/2 டீ ஸ்பூன், கடலைப் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன், மிளகு – 1/2 டீ ஸ்பூன், மல்லி – 1/2 டீ ஸ்பூன், சின்ன வெங்காயம் – 3, பூண்டு – 5 பற்கள்
சின்ன வெங்காயம்- பூண்டு குழம்பு செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .பின் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக வைக்கவும். புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். பிறகு வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளியுங்கள். அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும
பிறகு வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விடவேண்டும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் சின்ன வெங்காயம்- பூண்டு குழம்பு ரெடி