/indian-express-tamil/media/media_files/2025/05/29/V6c7MUfuM9qH0GNGNf00.jpg)
அடிவயிற்றில் இதை தேய்ங்க… பிரசவத்திற்கு பின் இருக்கும் தொப்பை குறையும்; டாக்டர் ராஜலெட்சுமி
பெரும்பாலான பெண்களின் எடை பிரசவத்திற்குப் பிறகு அதிகரிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு, பெண்களின் வயிற்றைச் சுற்றி கொழுப்பு குவிகிறது, இது நீண்ட காலத்திற்கு குறையாது. பல பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு தங்கள் உணவை மாற்றுவதன் மூலமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் எடையைக் குறைக்கிறார்கள். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு பெரிதான தொப்பையைக் குறைப்பது மிகவும் கடினம். பிரசவத்திற்குப் பிறகு, வயிற்று தசைகள் தளர்வாகிவிடும், இதன் காரணமாக வயிறு குறைவதற்கு நேரம் எடுக்கும். குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடல் மிகவும் பலவீனமாகிறது, எனவே உடல் எடையை குறைக்க அவசரப்பட வேண்டாம். தாய்மார்களுக்கு உதவக்கூடிய இயற்கை மற்றும் ஆரோக்கியமான வழிமுறைகளை ஏ.எஸ்.எம் இன்போ என்ற யூடியூப் சேனலில் டாக்டர் ராஜலெட்சுமி பகிர்ந்துள்ளார். அவருடைய ஆலோசனைகள், உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
உணவு முறையில் கவனம் தேவை:
கடைகளில் கிடைக்கும் துரித உணவுகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார். வீட்டிலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உணவில் அதிக புரதத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சாப்ட் டிரிங் மற்றும் பிற சர்க்கரை பானங்களைத் தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உடல் செயல்பாடுகள் மற்றும் ஓய்வு: உணவு முறைக்கு அப்பால், உடல் செயல்பாடுகள் மற்றும் ஓய்வின் முக்கியத்துவத்தையும் டாக்டர் ராஜலட்சுமி வலியுறுத்துகிறார். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். 3 மாதங்களுக்குப் பிறகு, படிப்படியாக லேசான பயிற்சிகளைத் தொடங்கலாம். போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் அவசியம். மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
பாரம்பரிய மற்றும் இயற்கை வைத்தியங்கள்:
பாரம்பரிய அறிவின் அடிப்படையில், சில இயற்கை பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள டாக்டர் ராஜலெட்சுமி பரிந்துரைக்கிறார். சீரகம், வெந்தயம், பூண்டு, இஞ்சியையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பிரசவத்திற்குப் பிறகு நீராவி குளியல் (steaming) பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். இந்த வழிமுறைகளை குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நல்ல பலன்களைக் காணலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். ஆயுர்வேத மருத்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய கொட்டம் சுக்காதி சூர்ணம் பொடியை வாங்கி அடிவயிற்றில் மேலிருந்து கீழ் நோக்கி நன்கு தேய்க்க வேண்டும். இதனால், கொழுப்பு கரைய தொடங்கும் என்கிறார் மருத்துவர் ராஜலெட்சுமி.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.