சென்னை ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்ததில் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். வீட்டில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத ஃபிரிட்ஜ் வெடித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நவீன வாழ்க்கையில் ஃப்ரிட்ஜ் என்பது ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய தேவையாகி விட்டது. இருப்பினும் அதை பயன்படுத்தும் அளவிற்கு பராமரிப்பதும் மிகவும் முக்கியம். ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற மின் உபயோக பொருட்களை 3 மாதத்துக்கு ஒருமுறை அதற்கான வல்லுனர்களை வைத்து பராமரிக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜ் வீட்டில் பாதுகாப்பாக வைப்பது எப்படி?
* ஃபிரிட்ஜ் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது கண்டெசர் காயிலை சுத்தம் செய்வதுதான். கண்டென்சர் தூசுகளால் அடைத்துக் கொண்டிருந்தால் ஃபிரிட்ஜ்ஜின் ஆற்றல் குறைந்துவிடும். இதனால் கம்பிரெசர் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக வெப்பத்தை வெளியேற்றும். அப்படி அதிக வெப்பம் வெளியேறுவதை நீங்கள் உணர்ந்தால், உடனே கண்டென்சர் காயிலை மாற்றி விடுங்கள்.
கன்டென்சர் காயிலிலிருந்து வெளிப்படக்கூடிய வாயு, வெளியேறுவதற்காகச் சிறிது இடம் இருக்க வேண்டும். சுவரை ஒட்டியபடி ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது. இதனால் அதிகளவில் வெப்ப வாயு வெளியேறாமல் இருப்பதால் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எலி தொந்தரவு இருக்கும் வீடுகளில், ஃப்ரிட்ஜ் கன்டன்சரை வலையினால் கவர் செய்வது நல்லது.
* ஃப்ரிட்ஜ் பொறுத்தவரைக்கும் சரியான கிரவுண்ட் எர்த் முக்கியம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஃப்ரிட்ஜின் பிளக் பாய்ன்டை எலக்ட்ரீஷியனை வைத்துப் பரிசோதிக்க வேண்டும்.
எர்த் லீக்கேஜ் சர்கியூட் பிரேக்கர் (ELCB) கருவியை மெயின் பிளக்பாய்ன்டிலோ அல்லது ஃப்ரிட்ஜிலோ பொருத்திக் கொள்வது சிறந்தது. இந்த கருவிகள் அதிகளவில் எர்த் வெளியேறுவதைத் தடுக்கும். ஒருவேளை எர்த் லெவல் அதிகமானால், தானாகவே மின்சாரத்தை நிறுத்திவிடும்.

* ஃப்ரிட்ஜ் அருகில் எப்போதும் ஒரு ரப்பர் மேட் போட்டு, அதன் மீது நின்று ஃப்ரிட்ஜ் கதவைத் திறக்க வேண்டும். ஒருவேளை எர்த்தின் வீரியம் காரணமாக ஃப்ரிட்ஜ் முழுவதும் அது பாய்ந்திருந்தால், ஃப்ரிட்ஜை திறக்கும் போது மின்சார தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, எப்போதும் ரப்பர் மேட்டில் நின்று கொண்டு ஃப்ரிட்ஜ் கதவைத் திறப்பது நல்லது.
* ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் தண்ணீர், பின் புறம் உள்ள பாக்ஸில்தான் தங்கும். அந்த நீர் காற்றில் ஆவியாக வெளியேறிவிடும். அதிகமான நீராக இருந்தால் நீங்களாகவே கழட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் தண்ணீரை, எப்படி நீக்குவது என்பதை எலக்ட்ரீஷியனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி தண்ணீரை வெளியேற்றுவதை வழக்கமாக்க வேண்டும். அங்கிருக்கும் தண்ணீர் மூலமாக மின்சாரம் பாய்வதற்கும் வாய்ப்பு அதிகம்.
* ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயு சில நேரங்களில் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, அடிக்கடி அதைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“