இரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... காப்பாற்றிய பாலியல் தொழிலாளர்கள்

பொதுவாக நமது வாழ்வில் ஒருவரைப் பார்த்த உடனே அவர்களைப் பற்றிய எண்ணத்தை மனதில் வளர்த்து விடுகிறோம். சில நேரங்களில் ஒருவர் செய்யும் தொழிலை வைத்தே மனிதர்களை எடைபோடுகிறோம். செய்யும் தொழிலுக்கும் தனிப்பட்ட நபரின் குணத்திற்கும் என்ன சமந்தம் உள்ளது? குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் அனைவரின் குணங்களையும் விமர்சிப்பது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால் அவர்களுள் நல்ல குணம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை யாரும் அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்கு நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது ஒரு உண்மை சம்பவம்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ளது ஜிபி ரோடு. காலை நேரங்களில் மார்க்கெட் போல இந்த ஜிபி ரோடு செயல்பட்டாலும், இரவு நேரங்களில் பாலியல் தொழில்கள் பெரும்பாலும் நடைபெற்று வரும் பகுதியாக அமைந்துள்ளது. அங்கு நடக்கும் பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் குறித்தும் ஆராய்ச்சி நடத்தச் சென்றிருக்கிறார் ஆராய்ச்சி மாணவி ஒருவர். அப்போது அங்குள்ள ஒருவர், “இப்போது இங்கு வர வேண்டாம். உன்னையும் விலைமாது என்று நினைத்துக் கூப்பிடுவார்கள். காலை வா, இப்போது திரும்பிச் செல்.” என்று கூறியுள்ளார்.

ஆனால் ஆராய்ச்சியின் காரணமாக அங்குச் சென்ற மாணவி அவரின் பேச்சை மீறி ஜிபி ரோடு பகுதிக்குள் சென்றுள்ளார். அங்கிருந்த விலைப் பெண்களிடம் அவரின் வாழ்க்கை முறை, தினந்தோறும் சந்திக்கும் சவால்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர்கள் பதில் கூறிக்கொண்டே இருக்க, மாணவி சுற்றியுள்ளவர்களை கவனித்திருக்கிறார். அப்போது திடீரென ஒரு சில ஆண்கள் அங்கு வந்து தவறாக முயற்சி செய்ய, உடன் அழைத்துச் சென்ற ஃபோட்டோகிராப்பர் ஒருவர் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தார்.

இதனைக் கவனித்த விலைமாதுகள் கும்பலாக அங்குக் கூடி, அந்த ஆண்களிடமிருந்து மாணவியை கப்பாற்றினர். ஆண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், மாணவியைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆராய்ச்சிக்காகச் சென்ற மாணவிக்கு நடந்த இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விலை மகள்களின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்யச் சென்ற மாணவி, தனது ஆராய்ச்சியில் அவர்கள் தன்னை காப்பாற்றியதையும் பதிவு செய்து கொண்டார்.

விலைப் பெண்களை உடல் உறவுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு,  மற்றவர்கள் போல நாங்களும் நல்ல மனமும் குணமும் கொண்டவர்கள் தான் என்று நிரூபிக்கிறது இந்த உண்மை சம்பவம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close