சுவாச முறைகள் கைரேகையைப் போலவே தனித்துவமானவை என்றும், அவற்றைக் கொண்டு தனிநபர்களை மிகத் துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒருவர் சுவாசிக்கும் விதமே அவரது "நாசி கைரேகையாக" (nasal fingerprints) செயல்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆய்வில், தனிநபர்களின் சுவாச முறையை மட்டும் அடிப்படையாக கொண்டு கிட்டத்தட்ட 97% துல்லியத்துடன் அவர்களை அடையாளம் காண முடிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து இஸ்ரேலின் வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வின் ஆசிரியர் நோயாம் சோபல் கூறும்போது, "சுவாசம் என்பது எல்லா வகையிலும் அளவிடப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாலும், சுவாசத்தை நோக்குவதற்கான முற்றிலும் புதிய வழியை கண்டறிந்துள்ளோம். இதை நாங்கள் மூளையின் செயல்பாடாகவே கருதுகிறோம்" என்றார்.
"கரண்ட் பயாலஜி" (Current Biology) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகள், ஒருவரின் "சுவாச கைரேகைகள்" அவர்களது உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index), உறக்கம்-விழிப்பு சுழற்சி, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவுகள், நடத்தை பண்புகளுடன் கூட தொடர்புடையதாக இருப்பதைக் காட்டியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
எனவே, சுவாச முறைகள் ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான சாளரமாக அமையக்கூடும் என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர். காற்றை உள்ளிழுக்கும்போது மூளை ஒரு வாசனையைச் செயலாக்குகிறது என்ற அறிவிலிருந்து இந்த ஆய்வுக்கான யோசனை பிறந்ததாக அவர்கள் விளக்கினர். இது, 'ஒவ்வொரு மூளையும் தனித்துவமானது எனும் பட்சத்தில், ஒவ்வொரு நபரின் சுவாச முறையும் அதைப் பிரதிபலிக்காதா?' என்று எங்கள் குழுவை சிந்திக்கத் தூண்டியது' என்றனர்.
ஆய்விற்காக, சுமார் 100 ஆரோக்கியமான இளைஞர்களுக்கு, ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய எடை குறைந்த அணியக்கூடிய சாதனம் ஒன்று பொருத்தப்பட்டது. பின்னர் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பங்கேற்பாளர்களின் நாசிக்குக் கீழே மென்மையான குழாய் பொருத்தப்பட்டு, அந்த சாதனம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக நாசி வழியாகச் செல்லும் காற்றின் ஓட்டத்தைக் கண்காணித்தது.
ஆய்வின் முடிவுகள் குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "97 பங்கேற்பாளர்கள் கொண்ட குழுவில், நாசி வழியான காற்று ஓட்டத்தின் அடிப்படையில் மட்டும் 96.8% என்ற துல்லியத்துடன் உறுப்பினர்களை எங்களால் அடையாளம் காண முடிந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனிதர்களுக்குத் தனித்துவமான நாசி கைரேகைகள் உள்ளன," என்று எழுதினர். 2 ஆண்டு காலமாக நடத்தப்பட்ட சோதனைகள் முழுவதிலும் இந்த உயர் மட்டத் துல்லியம் சீராக இருந்தது என்றும், இது குரல் கண்டறியும் தொழில்நுட்பங்களுக்கு (voice recognition technologies) ஒப்பான செயல்திறன் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்தின் மற்றொரு ஆய்வாளரான டிம்னா சொரோகா, "ஒவ்வொருவரும் ஓடுவது, படிப்பது (அ) ஓய்வெடுப்பது போன்ற வெவ்வேறு செயல்களைச் செய்வதால், ஒருவரை அடையாளம் காண்பது மிக கடினமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர்களின் சுவாச முறைகள் வியக்கத்தக்க வகையில் தனித்துவமாக இருந்தன," என்றார்.
/indian-express-tamil/media/post_attachments/2025/06/fingerprint_1600_freepik-485059.jpg)
மேலும், இந்த சுவாச கைரேகைகள் ஒரு நபரின் "உடலியல் நிலைகளான விழிப்புணர்வு நிலைகள் மற்றும் உடல் நிறை குறியீட்டெண், மற்றும் பதட்டம், மனச்சோர்வின் அளவுகள் மற்றும் நடத்தை போக்கு போன்ற அறிவாற்றல் பண்புகளுடன்" தொடர்புடையதாக இருந்தன. உதாரணமாக, பதட்டத்திற்கான அளவீடுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற பங்கேற்பாளர்கள், குறுகியதாக மூச்சை உள்ளிழுப்பதும், உறங்கும்போது மூச்சுகளுக்கு இடையிலான இடைவெளிகளில் அதிக மாறுபாடுகளைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற எவருக்கும் மனநலம் அல்லது நடத்தை சார்ந்த குறைபாடுகளை கண்டறிவதற்கான மருத்துவ அளவுகோல் பொருந்தவில்லை என்றாலும், நாசி வழியான காற்று ஓட்டத்தை நீண்டகாலம் கண்காணிப்பது ஒருவரின் உடல், உணர்ச்சி நலன் குறித்த ஆழமான பார்வைகளை வழங்கக் கூடும் என்று இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாகச் சொரோகா கூறினார்.
இதுகுறித்து சோபல் கூறுகையில், "நீங்கள் எந்த அளவிற்கு மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் இருக்கிறீர்கள் என்பது உங்கள் சுவாச முறையை மாற்றுகிறது என்று நாம் இயல்பாகவே கருதுகிறோம். ஆனால் வேறு விதமாகவும் இருக்கலாம். ஒருவேளை, நீங்கள் சுவாசிக்கும் விதம் உங்களை பதட்டமாகவோ அல்லது மனச்சோர்வாகவோ உணரச் செய்யலாம். அது உண்மையாக இருந்தால், அந்த நிலைகளை மாற்றுவதற்கு நாம் உங்கள் சுவாச முறையை மாற்றியமைக்க முடியும் என்றார். மன அழுத்தத்தை எதிர்த்து போராடுவதையும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆழ்ந்த சுவாசம் போன்ற சுவாசப் பயிற்சிகள், ஒருவரின் சுவாச முறைகளைக் கையாளுவதில் கவனம் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.