ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.பி.ஐ தரிசன முறையில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு வி.ஐ.பி பக்தர்களும் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.
மேலும், ஆந்திரா, தெலங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் மூலம் வி.பி.ஐ பிரேக் தரிசனத்தில் பலர் பயன்பெறுகின்றனர்.
இந்த சூழலில் கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வி.ஐ.பி பிரேக் தரிசன முறையை கட்டுப்படுத்துவதற்கு தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வி.ஐ.பி-க்களின் சிபாரிசு கடிதங்கள் பெறுவதை, தேவஸ்தான நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.