/indian-express-tamil/media/media_files/2025/08/22/revathi-sankaran-2025-08-22-17-04-19.jpg)
Revathi Sankaran
தமிழ் திரையுலகிலும், சின்னத்திரையிலும் தனது தனித்துவமான நடிப்பால் அழுத்தமான முத்திரையைப் பதித்தவர் நடிகை ரேவதி சங்கரன். இவர் ஒரு சாதாரண நடிகை மட்டுமல்ல, ஒரு தேர்ந்த ஹரிகதை கலைஞர், சிறந்த பேச்சாளர், பாடகி எனப் பல திறமைகளைக் கொண்டவர். தனது 80 வயதைக் கடந்த நிலையிலும், கலைத்துறையில் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் இவரின் வாழ்க்கை, பலருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு பாடமாகும்.
கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, தமிழக அரசு அவருக்கு 2010ஆம் ஆண்டில் கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருது, அவரது நீண்டகால கலைப்பணிக்கும், பன்முகத் திறமைக்கும் கிடைத்த ஒரு அங்கீகாரமாகும்.
ரேவதி சங்கரன் தனது கணவர் சங்கரனுடன் இணைந்து, ஒரு மகிழ்ச்சியான, உற்சாகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 80 வயதைக் கடந்த நிலையிலும், தம்பதியினர் இருவரும் தோட்டப் பணிகளில் ஈடுபடுவது, இசையை ரசிப்பது, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது என சுறுசுறுப்புடன் இருப்பது பலருக்கும் வியப்பையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
"எனக்கு ஏன் என்னுடைய கணவரை ரொம்ப பிடிக்கும் தெரியுமா? அவர் என்ன பொண்ணு பார்க்க வந்தப்ப நடந்தது இது. அந்தக் காலத்துல பொண்ணு பார்க்க வர்றதுன்னாலே பெரிய விஷயம். பொண்ணுப் பார்க்க வந்துட்டு, அவரோட அக்கா என்னைப் பார்த்து, "அய்யய்யோ! இந்தப் பொண்ணு ரொம்பப் பேசுறா. அதுக்கு மேல அவளுக்கு மாட்டுப் பல்லு. வேண்டாம். நம்ம வீட்ல எல்லாருக்கும் முத்து மாதிரி பல்லு. அது மாட்டுப் பல்லா இருக்கே. பிறகு ஒரே வீட்டுல மாட்டுப் பல்லு குழந்தைங்க பிறந்துடப் போறாங்க!"னு ஏதேதோ சொன்னாங்க. எனக்கு அது கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு.
அப்போ என் கணவர் என்ன சொன்னார் தெரியுமா? "யாரோ ஒருத்தர் பெத்து, வளர்த்து, நல்லாப் படிக்க வச்சு ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறப்ப, அவளுக்குப் பல்லு சரியில்ல, முடி சரியில்லன்னு சொல்றதுக்கு நான் யாரு? நான் முதல்ல பார்க்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைத்தேன். அந்தப் பொண்ணு எப்படி இருந்தாலும் பரவாயில்ல, நான் கல்யாணம் பண்ணிப்பேன்"னு அவுங்க அப்பாட்ட சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்", என்று ரேவதி சங்கரன் அந்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.