தலை முடியை பலரும் ஸ்டைலாக வாரிவிடுகிறோம், அதுவே அந்த முடி தலையில் இருந்து கீழே உதிர்ந்துவிட்டால் ஒரு அசூயையுடன் ஒதுக்கி தள்ளுகிறோம். ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், தலை முடி கொட்டுவது என்பது பலருக்கும் பெரும் கவலையாக இருகிறது. அப்படியே தலைமுடி இருந்தாலும், அடர்த்தி இல்லாமல், கருப்பாக இல்லாம இருக்கிறது என்ற கவலை. அதனால், இனி தலைமுடி பற்றிய கவலையை விடுவதற்கு, அரிசி கழுவிய தண்ணீருடன் கருவேப்பிலை, வெந்தயம் சேர்த்து பயன்படுத்தலாம். இதை உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
அரிசி அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிய தண்ணீரை 3 டம்ப்ளர் எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, ஒரு கைப்பிடி அளவு கரிவேப்பிலையை காம்பு, குச்சியுடன் எடுத்துக்கொள்ளுங்கள். இதை பொடியாக நறுக்கிய அரிசி கழுவிய தண்ணீரில் போடுங்கள். அதனுடன் 2 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் போடுங்கள். 1 ஸ்பூன் டீ தூள் சேருங்கள். நன்றாகக் கலக்கிவிடுங்கள்.
அடுத்து சின்ன வெங்காயம் 4 எடுத்துக்கொள்ளுங்கள், இதை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக தளதளவென கொதிக்க வையுங்கள். கொதித்த பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு, அந்த தண்ணீரை அப்படியே ஒரு அரைநாள் மூடி வைத்துவிடுங்கள். பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீருடன் மைல்டான ஷாம்பூ சேர்த்து கலக்குங்கள். அதனுடன், வேப்பிலைப் பொடி 2 ஸ்பூன் சேர்த்துக்க்கொள்ளுங்கள். நன்றாகக் கலக்குங்கள். இதை நீங்கள் குளிக்கும்போது உங்கள் தலைக்கு பயன்படுத்தலாம், நீளமான கருகரு கூந்தலை சூப்பராக பராமரிக்கலாம். முடி கொட்டுவதைத் தடுக்கலாம், தலைமுடி அடர்த்தியாக வளரும். இப்படி தயாரிக்கப்பட்ட லிக்யூடை ஒரு மாதம் வரை வைத்திருந்து தலைக்கு பயன்படுத்தலாம்.
அதே போல, நாம் வடிகட்டிய கரிவேப்பிலை, வெந்தயம், சின்ன வெங்காயத்தை தூக்கி போடாமல், அதை மிக்சியில் அரைத்து ஹேர் பாக் போல பயன்படுத்தலாம்.
ரொம்ப சிம்பிள், அரிசி கழுவிய தண்ணீர், கரிவேப்பிலை, வெந்தயம், டீ தூள், சின்ன வெங்காயம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும், 8 மணி நேரத்துக்கு பிறகு, வடிகட்டி, ஷாம்பூ, வேப்பிலைப் பொடி சேர்த்து பயன்படுத்த வேண்டும். அவ்வளவுதான், இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.