சன் டிவி-யில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், விஜே அக்ஷயா, காயத்ரி சாஸ்திரி, ராஜேஷ் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் தேசிய அளவிலான டாப் 10 டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பட்டியலில் கூட ‘ரோஜா’ சீரியல் இடம் பெற்றது.
அனு பற்றிய உண்மை வெளிவந்ததும் ரோஜா சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது நீலம்பரி என்ற புதிய வில்லியை இறக்கியதன் மூலம், இப்போது முற்றிலும் வேறொரு கோணத்தில் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
இப்படி தினமும் பல்வேறு புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல், சமீபத்தில் 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடித்தார்.
சை சை சயாரே, கிர்ராக் கிட்ஸ், ஷிரிடி சாய் கதா, மேகமாலா மற்றும் பாபாய் ஹோட்டல் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக தெலுங்கு மக்களிடையே பிரபலமானார்.
தற்போது, ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ரசிகர்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடுவார். அப்படித்தான் அவரின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரியங்கா சமீபத்தில் புகழ்பெற்ற மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸடாவில் பகிர்ந்துள்ளார்.
புகழ்வாய்ந்த மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இங்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருப்பமான கோயில்.
ஜெயலலிதாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மைசூரு சாமுண்டீஸ்வரி தேவி, சிறுவயது முதலே ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வம்.
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளின்போது சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்வதை ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் செல்லாத நேரங்களில், அவருக்காக அங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2011-ம் ஆண்டு, தனது பிறந்தநாளின் போது, ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று பூஜை செய்தார். அதுதான் கடைசியாக ஜெயலலிதா அங்கு தரிசனம் செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“