/indian-express-tamil/media/media_files/vbMSqA4G8idCEEznHyJO.jpg)
கோவை ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விபத்து மற்றும் நோய்களால் கால்களை இழந்த 250 பேருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டது. நவம்பர் மாதம் ரவுண்ட் டேபிள் அமைப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டதால் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தை அதன் உறுப்பினர்கள் ரவுண்ட் டேபிள் வாரம் எனக் கொண்டாடி வருகின்றனர். இந்த வாரத்தில் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் அதன் கிளையான லேடீஸ் சர்க்கிள் சார்பில் சமூக நலன் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விபத்து மற்றும் நோய்களால் கால்களை இழந்த 250 பேருக்கு இலவசமாக செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் செயற்கைக் கால்கள் மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா 3-ன் கோவை மாவட்ட தலைவர் பரத் சுப்ரமணியம் லேடீஸ் சர்க்கிள் ஏரியா 16 தலைவர் பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்கினர்.
இதுகுறித்து ரவுண்ட் டேபிள் இந்தியா 133-ன் தலைவர் கார்த்திக் குமார் கூறுகையில், "கோவையில் 8 ரவுண்ட் டேபிள், 6 லேடீஸ் சர்கிள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக, பல்வேறு நலத் திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆர்.எஸ்.புரத்தில் 1987-ம் ஆண்டு செயற்கை கால் மையம் தொடங்கப்பட்டது.
ஆண்டுதோறும் சுமார் 300 செயற்கை கால்கள் தயாரிக்கப்பட்டு கால்களை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு செயற்கை கால் தயாரிக்க ரூ.4,000 செலவாகிறது. இதனை ரவுண்ட் டேபிள் அமைப்புகளின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று தமிழகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் 250 பேருக்கு இலவசமாக செயற்கை கால்கள் பொருத்தப்படுகிறது.
இது தவிர இந்த வாரத்தில் ரத்த தானம் முகாம் நடத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகள் கூறுகையில், செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளதால் மறுபிறவியாக புதிய தன்னம்பிக்கை கிடைத்துள்ளது" என மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.