New Update
![Special darshan for pilgrims walking via forest routes pulmedu erumeli to Sabarimala Tamil News](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/19/HCiXFlSkeVY2jLAyLiPe.jpg)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜைக்கு குறைவான பக்தர்களுக்கே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வரும் 25-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
இதனிடையே, தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 ஆயிரத்து 853 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 22 ஆயிரத்து 703 பேர் உடனடி தரிசன முன்பதிவு மூலமாக பயனடைந்தார்கள்.
டிசம்பர் 24-ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டது. இதைத் தொடர்ந்து, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளுக்கான முன்பதிவு தற்போது நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள்களும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, 25-ஆம் தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 26-ஆம் தேதியான மண்டல பூஜை நாளில் 60 ஆயிரம் பக்தர்களுக்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி உடனடி தரிசன பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.