சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து கொச்சிக்கு ஒரு நாளில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு சபரிமலை சீசனில் ஏழு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் ஒரு விமானம் கூடுதலாக இயக்கப்படுகிறது. கொச்சியிலிருந்து நான்கு மணி நேர பயணத்தில் சபரிமலை உள்ளது.
சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக தினமும் 5 புறப்பாடு மற்றும் 5 வருகை என 10 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சபரிமலை நடை திறப்புக்காக 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள் என 14 விமான சேவைகள் இயக்கப்பட்டன.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் விமானத்தில் இருமுடி பைகள் எடுத்து வரலாம் என விமான நிலைய ஆணையம் அண்மையில் அனுமதி வழங்கிய நிலையில் விமானங்களில் அதிக பக்தர்கள் செல்கின்றனர்.
இதையொட்டி இந்த ஆண்டு சபரிமலை சீசனையொட்டி தினமும் சென்னையில் இருந்து கொச்சிக்கு 8 புறப்பாடு விமானங்கள், கொச்சியில் இருந்து சென்னைக்கு 8 வருகை விமானங்கள் என விமான சேவை அதிகரித்து உள்ளது.
மேலும் சென்னை- பெங்களூரு- கொச்சி இடையே இணைப்பு விமானங்களாக தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் என மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதோடு வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு, சென்னை- கொச்சி இடையே நேரடி விமான சேவையும் உள்ளது.
சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து இரவு 9:25 மணி வரையில் 8 புறப்பாடு விமானங்கள் கொச்சிக்கு இயக்கப்படுகிறது. கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியிலிருந்து இரவு 11.05 மணி வரையில் 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“