New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/26/dbRC0CUZtg0tqhx0EJMq.jpg)
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் வைகாசி மாத பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மே 19ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி (இடவம்) மாத தரிசனத்திற்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி நடைதிறக்க உள்ளார். மங்கல இசை முழங்க கோயில் நடை திறக்கப்பட்டு, ஆழிக்குண்டத்தில் அக்னி ஏற்றப்படும். பின்னர், ஐயப்பன் விக்கிரகத்தில் உள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து பூஜை எதுவுமின்றி நடை சாத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு 19ம் தேதி வரை தொடர் வழிபாடுகள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடிய பின் நடை அடைக்கப்படும்.
19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு சபரிமலைக்கு வருவதாக இருந்தது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போர்ப்பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அந்நாட்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் சபரிமலைக்கு வர உள்ளதாக தெரிகிறது. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன முன்பதிவு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, "குடியரசுத் தலைவர் வர உள்ளதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்நாட்களில் பக்தர்களுக்கான தரிசனம் இருக்காது" என்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.