ஹோலி பண்டிகை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வட இந்தியப் பண்டிகையாக இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களால் ஹோலி கொண்டாடப்படுகிறது.
சருமத்தை பாதுகாப்பது எப்படி?
கோடை வெயில் அடிக்கத் தொடங்கிவிட்டதால், ஹோலி கொண்டாட்டத்தின்போது, சூரிய ஒளி ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள, சருமத்தில் SPF 30 - 50 கொண்ட சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துவது அவசியம். உதட்டில் லிப் பாம் தடவுவதை உறுதிப்படுத்ததும். ஸ்கார்ஃப் உடன் கூடிய ஹை பன் போன்ற சிகை அலங்காரம் செய்து ஹோலி கொண்டாடுவதால், வண்ணப்பொடிகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறைக்கலாம் என்கின்றர் மருத்துவர்கள்.
ஹோலிக்கு முந்தைய நாள் உடலில் விளக்கெண்ணெய் தேய்ப்பதால், நிறங்களின் விளைவுகள் சருமத்தில் ஊடுருவுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், நிறங்கள் விரைவாக நீக்கவும் உதவுகிறது.
கொண்டாட்டத்திற்கு பின், கிளென்சரைப் பயன்படுத்தி வண்ணங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் பால் பவுடர் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து, உங்கள் சருமத்தில் தடவி சுத்தம் செய்தால், நிறங்கள் எளிதில் போய்விடும். அதன் பிறகு, நல்ல மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஹோலி விளையாடிய பிறகு, குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் முல்தானி மிட்டி பேக்கைப் பயன்படுத்தினால் அனைத்து நிறங்களும் முற்றிலுமாக நீங்கும். மேலும், வண்ணப்பொடிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையை தடுக்கிறது.ஹோலிக்கு முன்போ அல்லது பின்போ சில நாட்களுக்கு அழகு சார்ந்த சிகிச்சைகளைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர்.
ஹோலி விளையாடும்போது உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிவதால்,சாயங்களால் சருமத்திற்கு ஏற்படும் அதிகப்படியான சேதத்தைத் தடுக்க உதவும் எனக் கூறுகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/12/kYxmwbqr8YcjzZHlqymZ.jpg)
வண்ணப்பொடிகளால் கண்களுக்கு ஆபத்து:
ஹோலி வண்ணங்களிலிருந்து கண்களைப் பாதுகாப்பதும் முக்கியம். படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் கண்களில் சிறிது ரோஸ் வாட்டரைத் தேய்த்துக் கொள்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும். நம் கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. இவற்றில் நிறங்கள் பட்டால் கண்பார்வையைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனால் கொண்டாட்டத்திற்கு முன்பு தேங்காய் மற்றும் பாதாம் எண்ணெய்களை கண்களைச் சுற்றிப் பூசிக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஹோலி கொண்டாட்டம் - தலைமுடி பாதுகாப்பு
வண்ணப்பொடிகள் தலைமுடிக்குச் சேதம் விளைவிப்பதைத் தடுக்க சிறந்த வழி, முன்கூட்டியே பாதுகாப்பதுதான். ஹோலி கொண்டாட்டத்திற்கு முன் தலைமுடியில் தேங்காய் (அ) பாதாம் எண்ணெய் தேய்ப்பதால் முடியின் வேரில் வண்ணப்பொடி படிவதை தடுக்கலாம். கூந்தலை பின்னி அல்லது கொண்டை போட்டுக்கொண்டு ஹோலி கொண்டாடும் போது, அவை ஏற்படுத்தும் சிக்கல் மற்றும் சேதத்தை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், நிறங்களை ஈஸியாக நீக்க முடியும். சூடான நீர் மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்தி நிறங்கள் மற்றும் ரசாயனங்களை அகற்ற அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
நகத்திற்கும் முக்கியத்துவம் வேண்டும்:
ஹோலி கொண்டாடுவதற்கு முன்பு, நகத்தில் டார்க் கலர் நெயில் பாலிஷைப் பூச வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது நகங்களில் கலர் படிவதை தடுக்கும். நகத்தில் கலர் படிந்தால், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கலந்து நகங்களில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் கழுவினால் சரியாகி விடும்.