தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை உடுத்து வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படும்.
சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என இரண்டு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்யப்படும். அந்த வகையில் நெய் மணக்கும் தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். குக்கரில் எளிதாக செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 2 கப்
ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – தேவையான அளவு
காய்ந்த திராட்சை – தேவையான அளவு
பச்சை கற்பூரம் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் பச்சரிசியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 4 விசில் விடவும். அடுத்து மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும்.
வெல்லம் கரைந்து கொதித்து வந்த பிறகு தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் வெல்லப்பாகுவை ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். இப்போது குக்கரை திறந்து காய்ச்சிய வெல்லப்பாகுவை சேர்க்கவும்.
அடுத்து அரை ஸ்பூன் ஏலக்காய் பொடியை அதில் சேர்க்கவும். தனியாக ஒரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து சர்க்கரை பொங்கலில் சேர்த்து கலக்கவும். இப்போது மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக 1 ஸ்பூன் அளவிற்கு பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து விட்டால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“