/indian-express-tamil/media/media_files/2025/08/20/samantha-prabhu-2025-08-20-15-16-35.jpg)
உடலில் சேரும் நச்சுகள்; டாக்ஸின் டெஸ்ட் ஏன் அவசியம்? சமந்தா ருத் பிரபுவின் அனுபவம்!
இன்றைய விரைவான உலகில், நமது உடல்கள் தொடர்ந்து சுற்றுச்சூழலில் உள்ள மாசுபடுத்திகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள ரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான நச்சுப் பொருட்களுக்கு ஆளாகின்றன. காலப்போக்கில், இவை உடலில் குவிந்து, சோர்வு, ஹார்மோன் சமநிலையின்மை, செரிமானப் பிரச்னைகள், தோல் நோய்கள், நாள்பட்ட நோய்களுக்குக்கூட வழிவகுக்கும். இங்குதான் நச்சுப் பரிசோதனை (toxin test) முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் உடல் நச்சுப் பொருட்களை எவ்வளவு நன்றாக நிர்வகிக்கிறது மற்றும் வெளியேற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
சமீபத்தில், நடிகை சமந்தா ருத் பிரபு சமூக வலைத்தளங்களில் நச்சுப் பரிசோதனை செய்துகொண்ட தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். “உங்களுக்குத் தெரியும், நான் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள். சுத்தமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கிறேன்.
ஆனால் சமீபத்தில், நச்சுப் பொருட்கள் பற்றிய எனது 'டேக் 20' அத்தியாயத்திற்குப் பிறகு, நானே நச்சுப் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தேன்” என்று தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டிருந்தார். “முடிவுகள்? உண்மையாகவே அதிர்ச்சியூட்டின. எனது நச்சுப் பொருட்களின் அளவு நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. குறிப்பாக, பூஞ்சை நச்சுக்கள் (அஃப்லாடாக்சின்கள் போன்றவை). மேலும், சில கன உலோகங்களும் இருந்தன.”
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்தும் ஒருவருக்கும்கூட, யாரும் நச்சுப் பொருட்களிலிருந்து விடுபட முடியாது என்பதை இது உணர்த்தியது என்று சமந்தா ஒப்புக்கொண்டார். “இது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், மறைந்திருக்கும் நச்சுப் பொருட்கள் நம் உடலில் நுழையக்கூடும் என்பதை இது நினைவூட்டுகிறது,” என்றும் அவர் கூறினார்.
தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக, மருத்துவரின் உதவியுடன் பாதுகாப்பான, திட்டமிட்ட நச்சு நீக்கச் சிகிச்சையை (detox) மேற்கொள்ள இருப்பதாகவும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணித்து, சிகிச்சை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைச் சரிபார்க்க மீண்டும் பரிசோதனை செய்ய இருப்பதாகவும் சமந்தா தெரிவித்தார். நச்சுப் பரிசோதனை மற்றும் எப்போது அதைச் செய்ய வேண்டும் என்பது குறித்து, மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் பி.ஏ. சௌராசியாவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் பேசியது.
நச்சுப் பரிசோதனை என்றால் என்ன?
“நச்சுப் பரிசோதனை என்பது உங்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவை அளவிடும் மருத்துவ மதிப்பீடு ஆகும். இதில் கன உலோகங்கள் (ஈயம், பாதரசம், ஆர்சனிக் போன்றவை), பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக்கில் இருந்து வரும் ரசாயனங்கள், செரிமானக் குறைபாட்டால் ஏற்படும் நச்சுப் பொருட்கள் ஆகியவை அடங்கும்,” என்று டாக்டர் சௌராசியா கூறினார். நச்சுப் பொருட்களின் குவிப்பைக் கண்டறிந்து, உடலின் நச்சு நீக்கும் செயல்முறையின் திறனை மதிப்பிட, பொதுவாக ரத்தம், சிறுநீர் (அ) முடி மாதிரி பயன்படுத்தப்படுகின்றன.
எப்போது இந்தப் பரிசோதனையை செய்ய வேண்டும்?
வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் அவசியமானவை என்றாலும், பின்வரும் அறிகுறிகள் இருந்தால் நச்சுப் பரிசோதனை மிகவும் முக்கியமானது என்று டாக்டர் சௌராசியா குறிப்பிட்டார். விவரிக்க முடியாத சோர்வு, குறைந்த ஆற்றல் அல்லது கவனச்சிதறல், அடிக்கடி தோல் தடிப்புகள், முகப்பரு அல்லது மந்தமான தோல் போன்ற பிரச்சனைகள், செரிமானப் பிரச்னைகள், வயிறு வீக்கம் அல்லது ஒழுங்கற்ற குடல் இயக்கம், ரசாயனங்கள் அல்லது மாசுபடுத்திகள் அதிகம் உள்ள தொழில்களில் (தொழிற்சாலைகள், விவசாயம், கட்டுமானம்) வேலை செய்தல், அதிக மாசுபாடு உள்ள நகர்ப்புறங்களில் வசித்தல், புகைபிடித்தல், அதிக மது அருந்துதல் அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்ட வரலாறு. நச்சுப் பொருட்கள் கருவுறுதலையும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்பதால், கருத்தரிக்கத் திட்டமிடும்போது மருத்துவர்கள் இந்தப் பரிசோதனையை பரிந்துரைக்கலாம்.
ஆண்கள், பெண்கள் இருவரும் இந்தப் பரிசோதனையை செய்ய வேண்டுமா?
நச்சுப் பொருட்கள் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கின்றன, ஆனால் அதன் தாக்கம் வேறுபடலாம். நச்சுப் பொருட்கள் ஹார்மோன் சமநிலையைக் குலைத்து, மாதவிடாய் ஒழுங்கின்மை, கருவுறாமை அல்லது கர்ப்ப காலத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவை பெண்களுக்கு பி.சி.ஓ.எஸ். மற்றும் தைராய்டு செயலிழப்பு போன்ற பிரச்னைகளுக்கும் பங்களிக்கக்கூடும்.
ஆண்களுக்கு நச்சுப் பொருட்களின் வெளிப்பாடு டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, விந்தணுவின் தரத்தைப் பாதிக்கலாம், மேலும் stamina, தசை வலிமை மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் குறைக்கலாம்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை நச்சுப் பொருட்களால் சமமாக பாதிக்கப்படுவதால், இந்தப் பரிசோதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நீண்டகால உடல்நல சிக்கல்களைத் தடுக்க உதவும் தனிப்பயனாக்கப்பட்ட நச்சு நீக்க உத்திகளை வகுக்க உதவுகிறது.
நச்சுப் பரிசோதனை என்பது உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல, இது தடுப்பு சுகாதாரப் பராமரிப்பில் ஒரு செயல்திறன் மிக்க நடவடிக்கை. உடலில் மறைந்திருக்கும் நச்சுப் பொருட்களைக் கண்டறிவதன் மூலம், தனிநபர்கள் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ மாற்றங்களைச் செய்ய இது உதவுகிறது. இது ஆற்றல், கருவுறுதல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. அன்றாட வாழ்வில் மாசுபாடு அதிகரித்துவரும் நிலையில், நச்சுப் பரிசோதனை ஆண், பெண் இருபாலருக்கும் ஒரு முக்கியமான சுகாதாரப் பரிசோதனையாக மாறி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.