நடிகை சமந்தா சமீபத்தில் ஆட்டோ இம்யூனிட்டி குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கான பதிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆட்டோ இம்யூனிட்டி குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Samantha Ruth Prabhu asks what is autoimmunity, we get an answer from experts
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டதில் இருந்து, உடல்நலம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் மருத்துவர் டேவிட் ஜாக்கர்ஸ் என்பவரிடம் ஆட்டோ இம்யூனிட்டி குறித்து சமந்தா கேள்வி எழுப்பியிருந்தார். “தன் உடல் தன்னை தானே தாக்கிக் கொள்வதை ஆட்டோ இம்யூனிட்டி எனக் கூறுவார்கள். சுமார் 80 சதவீத ஆட்டோ இம்யூனிட்டி நோய்களை சரியான தூக்கம், ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம்” என மருத்துவர் ஜாக்கர்ஸ் தெரிவித்திருந்தார். இது குறித்து வல்லுநர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
ஆட்டோ இம்யூனிட்டி என்றால் என்ன?
ஆட்டோ இம்யூனிட்டி என்றால் என்னவென்று மருத்துவர் நரேந்திர சிங்லா விளக்கமளித்துள்ளார். "நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலமானது, தவறுதலாக அதன் ஆரோக்கிய செல்களை தாக்கி பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த சிக்கலான நோயினால் உலகில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை உறுப்புகளை செயலிழக்க செய்யக் கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.
இவை, மரபணு பிரச்சனை, சுற்றுச்சூழலில் நிலவும் நச்சுகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றால் ஏற்படலாம் என மருத்துவர் நரேந்திர சிங்லா கூறுகிறார்.
மூட்டு வலி, வீக்கம், சோர்வு, தோல் வெடிப்பு, செரிமான பிரச்சினைகள், தசை பலவீனம் மற்றும் அறிவாற்றல் குறைபாடு போன்றவை இதன் அறிகுறிகள் என மருத்துவர் நரேந்திர சிங்லா தெரிவித்துள்ளார். ஆட்டோ இம்யூனிட்டியை இரத்த பரிசோதனை உள்ளிட்ட பல மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.
இதனால் ஏற்படும் நோய்களை, வாழ்க்கை முறை மாற்றம், தொடர் மருத்துவ சிகிச்சைகள், நோயின் காரணத்தை கண்டறிந்து அதற்கான பிரத்தியேக சிகிச்சை அளித்தல், தொடர் உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவை மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் மருத்துவர் நரேந்திர சிங்லா பரிந்துரைத்துள்ளார்.
ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ளுதல், சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுதல், தேவையற்ற நேரங்களில் ஆன்டிபையோடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் மற்றும் தினசரி 8 முதல் 9 மணி நேரம் உறங்குதல் போன்றவை மூலம் இந்த வகையான நோயை கட்டுப்படுத்தலாம் என மற்றொரு மருத்துவரான விகாஸ் ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“