/indian-express-tamil/media/media_files/2025/03/24/HUjZclQB91YUV1MzZi6G.jpg)
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா, ஒரு பதிவை பகிர்ந்து கொண்டார். அதில், மூன்று நாட்களுக்கு யாருடனும் பேசாமல் முற்றிலுமாக அமைதியாகவும், தொலைபேசியை பயன்படுத்தாமலும் இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘One of the scariest things’: Samantha Ruth Prabhu reflects on experiencing solitude at silent retreat
இது சவாலாக இருந்ததாகவும், அதேவேளையில் பலன் அளிக்கும் வகையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "அமைதியான மூன்று நாட்கள். தொலைபேசியும் இல்லை, யாருடனும் பேசவும் இல்லை. நான் மட்டுமே தனிமையாக இருந்தேன். தனியாக இருப்பது மிகவும் பயமான விஷயங்களில் ஒன்று. இதை நான் மீண்டும் செய்வேனா என்று கேட்டால், ஆம் என்று பதில் அளிப்பேன், இதனை மற்றவர்களுக்கு பரிந்துரைப்பேனா என்று கேட்டால், அதற்கும் என் பதில் ஆம் என்பதாக தான் இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி இருப்பது முதலில் சிரமமாக இருந்தாலும், ஆழமான அனுபவத்தை கொடுப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார். முன்னதாக, கிராமி விருது பெற்ற அமெரிக்க பாடகர் SZA, இதே போன்ற முயற்சியை முன்னெடுத்தார்.
இவ்வாறு செயல்படுவது இந்த டிஜிட்டல் உலகில் மிகவும் சிரமமாக இருக்கும். இப்படி இருப்பதன் தன்மை குறித்து வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மனநல ஆலோசகரான நேஹா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். "இது போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்வது மனதை அமைதியாகவும், தெளிவாகவும் கொண்டு வர உதவி செய்யும். இது மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் உணர்வுகளைப் பற்றிய தெளிவான புரிதலை பெற உதவுகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நவீன வாழ்க்கையில் முழுமையாக அமைதியுடனும், தனிமையாகவும் இருப்பது பலருக்கு சங்கடமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியின் தருணங்களை அன்றாட வாழ்வில் இணைப்பதற்கான எளிய வழிகள்
இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அமைதியாக இருக்க முடியாதவர்கள் பகுதி நேரமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். "சில நிமிட தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளுடன் நாளைத் தொடங்குங்கள். சாப்பிடும் போது செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அருகில் இருக்கும் பூங்காக்களில் அமைதியாக நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இது போன்ற எளிய பழக்கவழக்கங்கள் சில மாற்றங்களை உருவாக்கும். இந்த நடைமுறைகள் மனதை மீட்டெடுக்க உதவுகின்றன" என்று நேஹா தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வழக்கம் அமைதியை கொடுத்தாலும் இதனால் சில எதிர்மறை தாக்கங்களும் இருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, இந்த முறை பலருக்கும் ஏற்றதாக இருக்காது. நீண்ட கால மௌனம் சில சமயங்களில் அடிப்படை உணர்ச்சிப் பிரச்சனைகளை அதிகப்படுத்தலாம். இது தனிமை அல்லது அதிக பதற்றம் போன்ற உணர்வை கொடுக்கலாம். எனவே, இது போன்ற செயல்முறைகளில் ஈடுபட விரும்புவோர் மனநல ஆலோசகர்களிடம் சரியான ஆலோசனை பெறுவது அவசியம் என்று நேஹா வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.