Samayal Recipe In Tamil, Small Onion Sambar Tamil Video: சின்ன வெங்காயத்தின் பலன்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிறிய ஜலதோஷம், நெஞ்சு சளி என தொடங்கி, இதயம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு நிவாரணியாக இருந்து வருகிறது. எனவே சின்ன வெங்காயத்தை நமது உணவில் அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம்.
Advertisment
சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயத்தை பிரதானமாகப் பயன்படுத்தி சாம்பார் செய்து பார்த்தது உண்டா? இது உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது மட்டுமல்ல, டேஸ்டானதும்கூட! சின்ன வெங்காயம் சாம்பார் எப்படி வைப்பது? என இங்கு பார்க்கலாம்.
Small Onion Sambar Tamil Video: சின்ன வெங்காயம் சாம்பார்
சின்ன வெங்காயம் சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் - 20 (தோல் உரிக்கவும்), புளி - எலுமிச்சைப் பழ அளவு, தக்காளி - 1, சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம் - தலா அரை டீ ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
சின்ன வெங்காயம் சாம்பார் செய்முறை :
முதலில் துவரம் பருப்பை குழைவாக வேக வைத்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கவும். பின்னர் அதனுடன் தக்காளியைப் போட்டு வதக்குங்கள். தொடர்ந்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றவும். பிறகு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்னர் அவற்றை சாம்பாரில் சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடுங்கள். இப்போது சுவையான உடல் நலத்திற்கு ஏற்ற சின்ன வெங்காய சாம்பார் ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"