சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 300 கிலோ 675 கிராம் தங்கத்தைத் தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.
இந்தப் பணிகளுக்காக அறநிலையத் துறை சார்பில் தமிழகம் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், கோயில்களுக்குச் சென்று காணிக்கை தங்கங்களில் உள்ள அழுக்கு, அரக்கு, கற்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப்படுத்தி தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காணிக்கையாக வரப்பெற்ற 300 கிலோ 675 கிராம் தங்கத்தை தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் நேற்று தொடங்கியது.
இந்தப் பணியில், அறநிலையத்துறை திருச்சி மண்டல ஆணையர் சி.கல்யாணி, சமயபுரம் கோயில் இணை ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ் மற்றும் நகை மதிப்பீட்டு வல்லுநர்கள், கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்தப் பணி நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தெரிவிக்கையில்;, ‘‘பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம் அனைத்தும் ஒரே மாதிரி தரத்துடன் இருக்காது. இவற்றைத் தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்த பின், பாரத ஸ்டேட் வங்கிமூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலைக்கு கொண்டு சென்று, 24 காரட் தங்கக் கட்டிகளாகமாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும்’’ என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“