/indian-express-tamil/media/media_files/hxLkna37atmf0zu5G91z.jpg)
Same sex marriage verdict
தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில், 1954-ம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது, சென்னையில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏமாற்றமடைய செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு எதிராக தீர்ப்பளித்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாற்று பாலினத்தவர் அல்லாத தம்பதிகளுக்கு சிவில் யூனியன்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.
இந்த தீர்ப்புக்கு பதிலளித்த திருநங்கைகள் உரிமை ஆர்வலர் கிரேஸ் பானு, (திருநங்கைகளுக்கு கிடைமட்ட இடஒதுக்கீடு கோரி போராடி வந்தவர்) இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
‘நாங்கள் இதை எதிர்பார்த்தோம், இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. உரிமைக்காகப் போராடித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். தொடர்ந்து போராடுவோம். தற்போதுள்ள சட்டங்களின்படி திருநங்கைகளுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு, ஆனால் தன்பாலின சமூகம் கைவிடப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கூறினார்.
திருமணம் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியதால், எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மாநிலம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்’, என்று பானு குறிப்பிட்டார்.
சென்னையைச் சேர்ந்த கட்டியக்காரி நாடகக் குழுவின் நிறுவனரும், தன்பாலின ஆர்வலருமான ஸ்ரீஜித் சுந்தரம், இந்த நாள் மிகவும் ஏமாற்றம் அளித்ததாகக் கூறினார்.
‘இந்த நாள் என் வாழ்வில் மிகச்சிறந்த நாளாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் அது மிகவும் ஏமாற்றமளிக்கும் நாளாக மாறியது. தன்பாலின சமூகம் நீண்ட காலமாக அடையாளம், உணர்வுகள் மற்றும் உரிமைகளுக்காக போராடி வருகிறது. அவர்கள் பல நூற்றாண்டுகளாக பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களாகவே பார்க்கிறார்கள்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2018ல் தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக வரையறுக்கும் 377-வது சட்ட பிரிவு இந்தியாவில் செல்லாது, என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் அது தனிப்பட்ட வாழ்க்கைக்கான சுதந்திரம். பொது இடத்தில், எங்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இந்த வழக்கில் தன்பாலின திருமணங்கள் மட்டும் அல்ல, அதற்குப் பின்னால் வேறு பல விஷயங்களும் இருக்கின்றன. தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டால், அவர்கள் குழந்தையைத் தத்தெடுக்க முடியும். அவர்கள் விபத்தில் சிக்கினால் மருத்துவமனையில் தங்கள் துணைக்காக கையெழுத்திடலாம் அல்லது கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள்’, என்று ஸ்ரீஜித் சுட்டிக்காட்டினார்.
நாங்கள் பல கூட்டங்களை நடத்தி, தமிழகத்திலிருந்து பரிந்துரைகளை அனுப்பினோம், அவை நீதிபதியால் வாசிக்கப்பட்டன. ஒரு குழு பரிந்துரைகளை வழங்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவற்றை நாங்கள் எப்படி நம்புவது? அந்தக் குழுவில் யார் இருக்கப் போகிறார்கள்? இது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தன்பாலின உறுப்பினர்களை உள்ளடக்கி ஒரு முடிவுக்கு வருமா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
உச்ச நீதிமன்றம் எந்த பரிந்துரை செய்திருந்தாலும் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது, சட்ட அங்கீகாரம் மட்டுமே தேவை.
நாடு முழுவதும் உள்ள மாற்று பாலின தம்பதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஓரின சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின தம்பதிகள் (gay or bisexual couple) பயமின்றி இங்கு எப்படி வாழ முடியும்?
கிராமங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கவுரவக் கொலைகள் எப்போதும் சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் மட்டும் அல்ல, அது பாலியல் காரணமாகவும் நடக்கிறது. அவர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன, தங்கள் இடத்தில் எப்படித் திருமணத்தைத் தொடரலாம் என்று கேட்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அடியாகும். 15 வருடங்களாக பிரைட் வாக் நடத்தி வருகிறோம். எங்கள் முதல் நடைப்பயணத்தின் போது எழுப்பப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று தன்பாலின திருமணத்தை அங்கீகரிப்பது, ஆனால் இதுவரை எங்களுக்கு அது கிடைக்கவில்லை. நாங்கள் பழைய நிலைக்கேத் திரும்பியது போல் உணர்கிறோம், என்றார்.
எங்கள் சமூகம் இன்னும் அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் இருந்து மீளவில்லை. அடுத்ததாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கூடி விவாதம் நடத்த ஓரிரு நாட்கள் ஆகும் என்று ஸ்ரீஜித் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 நாட்களுக்கும் மேலாக கேட்டது. இதில், சம உரிமை முதல் தனியுரிமை வரையிலான வாதங்கள், திருமணத்தால் வழங்கப்படும் சட்டப்பூர்வ சலுகைகள் மற்றும் உரிமைகள், தன்பாலின திருமணங்களின் தாக்கம் போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மத்திய அரசு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் அமைப்பான ஜமியத்-உலமா-இ-ஹிந்த் ஆகியவை இதற்கு எதிராக வாதாடின.
Read in English: ‘Expected this, but feeling let down’: Chennai activists disappointed by SC verdict on same-sex marriages
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.