காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவையொட்டி டிச. 20ம் தேதி காலை 6 முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை கோயில் நடை சாத்தப்படாது.
இந்நிலையில், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருநள்ளாறு கோயிலுக்கு 200 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன் தெரிவித்திருப்பது: ’சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி (டிச.20), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் மூலம் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் வசதிக்காக, சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து டிசம்பா் 19 ஆம் தேதி கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊா்களிலிருந்து திருநள்ளாறுக்கு செல்ல பயணிகள் வசதிக்காக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தா்கள் சென்று திரும்பி வருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், கைப்பேசி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’, என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“