சேலைகளை டிரை கிளீனிங்கிற்கு கொடுத்தால் அதற்கு அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், துணியை அயன் செய்யும் போது கறைகளும் ஏற்படுகிறது. இதனால் வீட்டிலேயே டிரை கிளீனிங் எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம். இதற்கு ரூ. 5 மட்டுமே செலவாகும்.
முதலில் சேலையை எடுத்து எந்த பகுதிகளில் எல்லாம் கறைகள் இருக்கிறது என தெளிவாக பார்க்க வேண்டும். இதன் பின்னர், கால் பக்கெட் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் உப்புத் தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
இந்த தண்ணீருடன் ஒரு ஸ்பூன் ஷாம்பூ, முக்கால் ஸ்பூன் கண்டிஷனர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவற்றை கலந்து விட்டு, அரை ஸ்பூன் கம்ஃபோர்ட் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் தண்ணீரில் கலந்த பின்னர், ஒரு மைக்ரோஃபைபர் துணியை இந்த தண்ணீரில் முக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது தண்ணீரில் முக்கி எடுத்த மைக்ரோஃபைபர் துணியை கொண்டு, சேலையில் கறைகள் இருக்கும் இடங்களில் அழுத்தி துடைக்க வேண்டும். இவ்வாறு துடைத்து எடுத்த பின்னர், அதிகம் வெயில் படாத இடத்தில் சேலையை காய போட வேண்டும். அதிக வெயிலில் துணியை காய போட்டால் துணியின் நிறம் மற்றும் தன்மை விரைவாக மாறிவிடும்.
இதையடுத்து, காய்ந்த சேலையை எடுத்து வீட்டில் அயன் செய்யலாம். முதலில் சேலையின் பார்டரில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அயன் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நாமே வீட்டில் டிரை கிளீன் செய்து விடலாம்.