Healthy Recipes for Diabetics: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், முறையற்ற உணவு, மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் உலகில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்க பல சிகிச்சைகளும் மருந்துகளும் உள்ளன என்றாலும், எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மூலம் அதனைக் கட்டுப்படுத்தும் எளிய வழியும் உள்ளது. கீழே நாங்கள் குறிப்பிடும் விதைகளை (சீட்ஸ்) தினமும் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். அதை இங்கே பார்ப்போம்.
பரங்கி விதை (பூசணி)
பூசணி விதைகளில் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை குறைக்கும் பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை இது குறைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
சிறுதானிய சாலட்
தேவையானவை
1 கப் - சோளம் மற்றும் ராகி
2 கப் - கேப்ஸிகம்
2 கப் - வேகவைத்து க்யூபாக நறுக்கிய பூசணிக்காய்
1 பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது
2-3 டீஸ்பூன் - எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்
ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகு
4 டீஸ்பூன் - மாதுளை முத்துக்கள்
மேலே தூவுவதற்கு வறுத்த பூசணி விதைகள்
அலங்கரிக்க - மிளகு தக்காளி
டிரெஸ்ஸிங் செய்ய
1 கப் - கொத்தமல்லி
1/2 கப் - துளசி
1/2 கப் - தயிர்
2 டீஸ்பூன் - ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு
2 டீஸ்பூன் - தேன்
ருசிக்கேற்ப உப்பு மற்றும் மிளகு
செய்முறை
தானியத்தை 4-5 மணி நேரம் நன்றாக கழுவி ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து மீண்டும் கழுவவும். இப்போது அவற்றுடன் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதோடு ருசிக்கேற்ப உப்பு சேர்க்கவும். கொதி வந்ததும் நெருப்பை குறைத்து, சுமார் 8-10 நிமிடங்கள் சிம்மில் வைத்திருக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, இரண்டு நிமிடங்கள் வைக்கவும். தண்ணீர் இருந்தால் வடிகட்டவும், பின்னர் அதை வேறொரு கிண்ணத்திற்கு மாற்றி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும். இவற்றுடன் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில், கேப்ஸிகம், சிறிது வேகவைத்த பூசணி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவற்றுடன், ஆலிவ் எண்ணெய், உப்பு மற்றும் மிளகினை தூவிக் கொள்ளவும். மிதமான தீயில் காய்கறிகளை பாதியளவு வேக வைத்துக் கொள்ளவும்.
டிரெஸ்ஸிங் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள மூலிகைகள், தயிர், வினிகர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலக்கவும். அதோடு தேன், உப்பு மற்றும் மிளகை தூவிக் கொள்ளலாம்.
சாலட்டை தயாரிக்க முதலில் சிறுதானியங்களை ஒரு பிளேட்டில் எடுத்துக் கொள்ளவும். அதன் மேல் பாதி வேகவைத்த காய்கறிகள், பின்னர் மாதுளை மாதுளை முத்துக்கள் சேர்த்து, இறுதியாக பூசணி விதைகளை தூவவும். கடைசியாக மிளகு தக்காளியை அலங்கரித்து, ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது இவை அனைத்தும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கிளறியும் சாப்பிடலாம்.
குறிப்பு : சோளம், ராகியை நீங்கள் வேறு தானியங்களாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தயார் செய்யும் முறை ஒன்று தான்.
ஆளி விதைகள்
ஆளி விதைகளை ஒழுங்காக மென்று சாப்பிடாவிட்டால், ஜீரணம் ஆகாமல் போய்விடும். எனவே இந்த விதைகளை அரைத்து, அந்த பவுடரை வேகவைத்த உணவுகள், ஓட்ஸ், தானியங்கள், ஸ்மூத்தீஸ் அல்லது தயிர் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அதோடு ரொட்டி மற்றும் பூரி மாவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
சியா விதைகள்
சியா விதைகளை ஆளிவிதைகளைப் போல அரைக்கத் தேவையில்லை. வெறுமனே காலை உணவு, தானியங்கள், புட்டு, கஞ்சி, காய்கறி மற்றும் அரிசி உணவுகள் அல்லது தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
வெந்தயம்
வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் குடிக்கவும். இது ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
ஓமம்
ஒருவரின் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஓமம் உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஓமம் கலந்து குடிப்பதால், ஜீரணம் சீராகும்.