/indian-express-tamil/media/media_files/2025/06/19/white-spots-on-your-s-2025-06-19-10-29-40.jpg)
தோலில் வெண்புள்ளிகள் இருந்தால் உஷார்; டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை
தொழுநோய், ஆங்கிலத்தில் Hansen's disease என அழைக்கப்படுகிறது. மைக்கோபாக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நீண்டகால தொற்றுநோயாகும். முக்கியமாக தோல், நரம்புகள், மேல் சுவாசம், கண்கள் மற்றும் விரைகள் போன்றவற்றை பாதிக்கிறது.
அறிகுறிகள்: தோலில் வெள்ளை (அ) சிவப்பு நிறத் திட்டுகள், இவை பெரும்பாலும் உணர்வின்றி இருக்கும் (குளிர், சூடு, தொடுதல் ஆகியவற்றை உணராமல் இருத்தல்). நரம்பு பாதிப்பு காரணமாக விரல்களில் பலவீனம், மரத்துப் போதல் அல்லது செயலிழப்பு. கண்களில் பாதிப்பு, மூக்கில் புண்கள் அல்லது அடைப்பு ஏற்படக் கூடும்.
தோலில் வெள்ளைத் திட்டுகள் தோன்றுவது தொழுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்தத் திட்டுகளில் ஊசி குத்தும்போது உணர்வு இல்லாவிட்டால் (சண்டேஷன் இல்லாவிட்டால்), அது தொழுநோயாக இருக்கலாம். பெரும்பாலும் இந்தத் திட்டுகள் பூஞ்சை தொற்று அல்லது ஸ்டீராய்டு கிரீம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.
தொழுநோய் பற்றிய புள்ளிவிவரங்கள்: உலக அளவில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உள்ளனர். குறிப்பாக ஒரிசா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நோயின் காரணம் மற்றும் பாதிப்பு: மைக்ரோபாக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற பாக்டீரியாவால் தொழுநோய் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா நரம்பு மண்டலத்தை (Peripheral nerves) தாக்கி, நிரந்தர சேதத்தை ஏற்படுத்துகிறது. தொழுநோயாளிகளுடன் நீண்டகால தொடர்பு (Prolonged contact), குறிப்பாக சுவாசம் மூலம் இந்த நோய் பரவலாம். அரிதாக தொடுதல் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
சிகிச்சை மற்றும் முக்கியத்துவம்: தொழுநோய்க்கு அருமையான மருந்துகள் உள்ளன, மேலும் சிகிச்சை அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. சிகிச்சை 6 முதல் 12 மாதங்கள் வரை தொடர வேண்டும். சிகிச்சை தொடங்கிய 3 நாட்களுக்குள் பரவும் தன்மை குறையும். முழுமையான குணமடைதலுக்கு சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்வது அவசியம். இடையில் சிகிச்சையை நிறுத்தினால், நோய் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
விழிப்புணர்வின் அவசியம்: ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம். தோலில் உள்ள திட்டுகளில் உணர்வு, வெப்பநிலை உணர்வு அல்லது வலி உணர்வு இல்லாவிட்டால், உடனடியாக பரிசோதிப்பது அவசியம். தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது நோய் ஒழிப்பிற்கு உதவும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.