Sembaruthi Serial Shabana shares her struggles Tamil News : மூன்று வருடங்களுக்கும் மேலாக மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது செம்பருத்தி சீரியல். இதில் பார்வதி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ஷபானா, இஸ்லாமிய பெண்ணாக இருந்துகொண்டு தான் எப்படி திரைத்துறையில் வெற்றிபெற்றார் என்பதை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
"என் வாழ்க்கையை முழுமையாக மாற்றியது செம்பருத்தி சீரியல்தான். இதன் மூலம் மக்களிடமிருந்து ஏராளமான அன்பை சம்பாதித்திருக்கிறேன். முதல் முறையாக பார்வதி கதாபாத்திரத்தின் ஸ்க்ரிப்ட் படித்தபோது, இவ்வளவு பூரணமான பெண் இருக்கமுடியுமா என்றெல்லாம் தோன்றி இருக்கிறது. நாளடைவில், நான் எதையாவது யோசிக்கும்போதும் அல்லது முடிவெடுக்கும்போதும் பார்வதியாகவே மாறி நடந்துகொள்கிறேன். அது நல்லதுதான் என்று நினைக்கிறேன்.
சமீபத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்தவர் மாற்றம் செய்தது மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. நாளைக்கு மாற்றப்போகிறார்கள் என்றால், எனக்கு இன்றைக்குத்தான் விஷயம் தெரிந்தது. அன்று இறுதி சீனில் எங்களால் ஒழுங்காக நடிக்கக்கூட முடியவில்லை. உண்மையில் கார்த்தி எனக்கு ஓர் நல்ல நண்பர். 3 வருடமாக ஒன்றாக பயணம் செய்து, திடீரென விட்டுச் சென்றால், கஷ்டமாகத்தானே இருக்கும். ஆனால், நாளடைவில் அந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டேன்.
இஸ்லாமிய குடும்பத்தில் பெண்களுக்கு எந்த அளவிற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயமே. அதிலும், எங்கள் வீட்டில் மிகவும் ஸ்ட்ரிக்ட். இப்போது விரலால் எண்ணுகிற அளவிற்குதான் என் குடும்ப உறுப்பினர்கள் என்னுடன் பேசுகிறார்கள். முதல் முதலில் நடிப்பதைப் பார்த்துவிட்ட அவர்கள், பொட்டு வைத்திருக்கிறேன், நடனமாடுகிறேன் என்றெல்லாம் திட்டினார்கள். அவர்கள் என்னுடன் பேசியே 3 வருடங்கள் ஆகின்றன.
எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். அவர் எனக்கு முழுமையாக சப்போர்ட் செய்கிறார். சீரியலில் நெருக்கமான காட்சிகள் வந்தால், உடனே உறவினர்கள் அம்மாவுக்கு போன் செய்து திட்டி தீர்ப்பார்கள். இந்து மத பையன்கூட பேசுகிறாளா? நடிக்கிறாளா? என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு கேமரா முன்னாடி நடிக்க மிகவும் பிடிக்கும். பிடித்ததை செய்துகொண்டும் இருக்கிறேன்.
திரையில் நடிக்கும் பெண்களுக்கு உண்மையான பக்கபலம் அவர்களின் வாழ்க்கை துணைவர்தான். அவர்கள் நமக்கு முழுமையாக சப்போர்ட் செய்பவர்களாக இருக்கவேண்டும். திரையில் பார்ப்பது வெறும் நடிப்பு என்பதை மக்களும் அவர்களின் குடும்பங்களும் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். 100 பேரு முன்னாடி நெருக்கமாக நடிப்பதில் உண்மை ஏதும் இருக்காது என்பதைப் புரிந்துகொண்டால், சித்ராவிற்கு நேர்ந்த சோகம் போல் இனி யாருக்கும் நடக்காது".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.