பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.
Advertisment
சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.
இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘என்ன மச்சான்’ பாடலை இத்தம்பதி பாடினர். பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "கலையை மட்டுமே நம்பியுள்ள கலைஞர்களுக்கு, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தான் சீசன் இருக்கும். அப்போது தான் அவர்களுக்கு நிகழ்ச்சிகள் கிடைக்கும். ஆனால், இப்போது ஊரடங்கு காரணமாக, கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் பல கலைஞர்கள் திண்டாடுகின்றனர். கடன் அடைப்பது, மளிகை சாமான் வாங்குவது, பால், அரிசி போன்ற அன்றாட தேவைகளுக்கு கூட சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆகையால், பலருக்கும் உதவி செய்து வரும் தமிழக அரசு, கலைஞர்களுக்கு அவர்களை அன்றாட வாழ்க்கையை தொடர உதவி புரியுமாறு வேண்டுகிறோம்" என்று உருக்கமுடன் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”