/indian-express-tamil/media/media_files/2025/07/16/serial-actress-meera-krishnan-skin-care-2025-07-16-11-16-35.jpg)
Serial actress Meera krishnan
நடிகை மீரா கிருஷ்ணன் - இந்த பெயர் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கியபோது, அவருடைய உடல் எடையைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனங்களை ஒரு உந்துதலாக எடுத்துக்கொண்டு, மீரா கிருஷ்ணன் தன்னுடைய உடல் எடையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். சில மாதங்களில் கிட்டத்தட்ட 15 கிலோ எடை குறைத்து, புதிய தோற்றத்துடன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மீராவின் இந்த பயணத்தின் ஒரு பகுதி இங்கே, மிஸ் வொவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த ஒரு நேர்காணலில் இருந்து...
சர்க்கரையை கட்டுப்படுத்துங்கள், எடை குறையும்!
"40 வயதிற்கு மேல் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினம். என்னைப்போல் உடல் எடை அதிகரிக்கும் ஒருவருக்கு, சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுதான் முதல்படி. நான் சர்க்கரையை மட்டும் கட்டுப்படுத்தியபோது, என் உடலில் இருந்த கொழுப்பு குறைந்தது, அதனால் எனக்கு 5 கிலோ எடை தானாகவே குறைந்தது. சர்க்கரை நம் உடலில் உள்ள ரத்தத்தில் நேரடியாக கலப்பதால், அதை முதலில் கட்டுப்படுத்துவது அவசியம்."
உணவு முறைகள் மற்றும் டயட் பற்றிய மீராவின் ஆலோசனைகள்
நான் 900-1000 கலோரிகள் கொண்ட உணவுமுறையைப் பின்பற்றினேன். இது மிகவும் கடினமானதுதான். தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வரலாம், ஆனால் உறுதியோடு இருந்தால் இதைத் தாண்டி வரலாம். தொடக்கத்தில் தூக்கமின்மை, பசி போன்ற பிரச்சனைகள் இருந்தன. பரோட்டா, பிரியாணி என்று பிடித்த உணவு வகைகளை அதிகம் சாப்பிட்ட நான், இப்போது மைதா மற்றும் பலவற்றைத் தவிர்த்துவிட்டேன். ஆனால், இந்த முயற்சிக்குக் கிடைத்த பலன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
நான் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடுவேன். ஆனால், உடல் எடைக் குறைப்பின்போது, நான் சில உணவு முறைகளை மாற்றிக்கொண்டேன். உதாரணத்திற்கு, காலையில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த பட்டர் பிளாக் காபி அருந்துவேன். இது உடலுக்குப் பொலிவையும், நாள் முழுவதும் ஆற்றலையும் கொடுக்கும். பிறகு இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பிறகு, 4 ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டை சாப்பிடுவேன். இதில் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்துச் சாப்பிடுவேன். அதன்பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மதிய உணவாக சப்பாத்தி எடுத்துக்கொள்வேன்.
ஒரு நாளில் ஒரு பழம்! இது என் டயட் ஃபார்முலாவின் ஒரு முக்கிய அங்கம். உடலில் உள்ள கலோரிகளைக் குழப்பாமல் இருக்க, ஒரே நேரத்தில் பல பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு நேரத்தில் ஒரு பழம் மட்டுமே சாப்பிட்டேன். உதாரணத்திற்கு, ஆப்பிள் சாப்பிட்டால், ஆப்பிளை மட்டுமே சாப்பிடுவேன். நிறைய காய்கறிகள், குறிப்பாக கேரட் மற்றும் பீன்ஸ் அதிகமாகச் சாப்பிட்டேன். தேங்காய் பால் ஊற்றி பொரியல் அல்லது குருமா செய்து சாப்பிடுவது வழக்கம். மக்கானாவுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நொறுக்குத்தீனியாகச் சாப்பிடுவேன். இவை அனைத்தும் உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருந்தன.
தேங்காய் எண்ணெய் என் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியமான கொழுப்பு. சமையலுக்கும், தலைக்கும், முகத்திற்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவேன். நான் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் என எதையும் பயன்படுத்தவில்லை."
விடாமுயற்சியே வெற்றி!
"உடல் எடைக் குறைப்பின்போது விடாமுயற்சி மிக முக்கியம். நான் 30 மணிநேரம் கூட சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். ஆனால், இந்த முயற்சிக்குக் கிடைத்த பலன் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இப்போது, கண்ணாடியில் பார்க்கும்போது நானே வியந்துபோகிறேன். பழைய ஆடைகள் மிகவும் தளர்வாக இருக்கின்றன. உடல் எடை குறைப்பால், பலரும் என்னிடம், 'உங்களுக்கு உடல்நலம் சரியில்லையா?' என்று கேட்கிறார்கள். ஆனால், நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எடை குறைப்பு எனது ஆரோக்கியத்தை மேம்படுத்தியிருக்கிறது." என்கிறார் நடிகை மீரா கிருஷ்ணண்.
மீராவின் இந்த அனுபவம், அவருடைய தன்னம்பிக்கையையும், உழைப்பையும் காட்டுகிறது. அவருடைய இந்த மாற்றம் பலருக்கும் ஒரு ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.