Serial Actress Neelima Rani Kitchen Vessels Viral Video Tamil News : சமீபத்தில் தான் கர்ப்பமானதை உறுதி செய்து, தடுப்பூசியும் போட்டுக்கொண்டதைப் பதிவு செய்து பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நீலிமா ராணி, தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஏராளமான உபயோகமான காணொளிகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், தன்னுடைய கிச்சனில் என்ன பாத்திரங்கள் எல்லாம் உள்ளன என்பதைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். அப்படி என்ன வித்தியாசமாக அவருடைய கிச்சனில் உள்ளது?

“எந்தப் பாத்திரத்தில் என்ன உணவு வகை சமைத்தால், அதன் தரம் மேலும் நல்லா இருக்கும் என்பதைப் பல வருடங்களாகப் பல சோதனைகள் செய்து நாங்கள் கண்டுபித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன். நிச்சயம் இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்” என்கிற குறிப்போடு ஆரம்பிக்கிறார் தன்னுடைய பாத்திரம் டூர் விடிவோவை.

“முதலில் இரும்பு சட்டி. சமையலைப் பொறுத்த வரையில் அவ்வளவு நல்லது இந்த இரும்பு. எவ்வளவுக்கு எவ்வளவு எடை அதிகமா இருக்கோ அவ்வளவு வலிமையா இருக்கும். ஆனால், இதனைத் துருப்பிடிக்காமல் பராமரிப்பது மிகவும் கடினம். அதற்கு, பயன்படுத்திய பிறகு எப்போதும் 2 சொட்டு எண்ணெய் தடவி வெச்சுட்டோம்னா அப்படியே மெயின்டெயின் ஆகும். எங்களிடம் சிறிய இரும்பு கடாய் உள்ளது. அதில், தாளிப்பது, அப்பளம் பொறிப்பது போன்றவற்றைச் செய்வோம். தோசை, சப்பாத்தி செய்வதற்கும் இரும்பு தோசைக் கல்தான் பயன்படுத்துவோம்.

அதைப்போல மண் கடாயும் உள்ளது. காய்கறி, கீரை வகைகள் இதில் செய்தால் ருசி நன்றாக இருக்கும். ஆனால், இதனை தினமும் பயன்படுத்த மாட்டோம். தினமும் பயன்படுத்த இண்டோலியம் கடாய் உள்ளது. இண்டோலியம் கொஞ்சம் வலுவாக இருக்கும் ஆனால், அலுமினியம் கொஞ்சம் வலிமை குறைவாக இருக்கும். வெண்டைக்காய் முதல் உருளை வறுப்பது வரை இந்த இண்டோலியம் கடாய் தான் பயன்படுத்துவோம்.

அடுத்தது கல் சட்டி. இதுதான் அந்தக் காலத்து ஹாட் பாக்ஸ். இப்பல்லாம் யாரும் இதைப் பயன்படுத்துவது இல்லை. இதன் ஸ்பெஷாலிட்டி அடுப்பை அணைத்தபிறகும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதித்துக்கொண்டே இருக்கும். சமைத்தபிறகும் குறைந்தபட்சம் 2 முதல் 3 மணிநேரம் வரை சூடாக இருக்கும். இதில் பருப்பு, சாம்பார், கூட்டு உள்ளிட்ட பருப்பு சம்பந்தப்பட்ட உணவு வகைகளை செய்யலாம். இந்த சட்டியைப் பராமரிக்க மஞ்சள் மற்றும் ஆமணக்கு எண்ணெய்யை இதன் மேல் தேய்த்து, 3 முதல் 4 நாட்கள் அப்படியே வைத்துவிடுங்கள். பிறகு, அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதுபோல், 3 முறை செய்தால் இந்த கல் சட்டி பயன்படுத்தப்படுவதற்கு ரெடி.

எங்கள் வீட்டில் சாதம் வடித்துத்தான் சாப்பிடுவோம். புலாவ், பிரியாணி போன்றவற்றை மட்டுமே குக்கரில் வைப்போம். மற்றபடி சாதம் வடித்துத்தான் பயன்படுத்துவோம். அதற்கேற்ற பாத்திரம் மற்றும் தட்டு உள்ளது. கஞ்சி வடிகட்டி எடுக்கத் தனி பாத்திரம் உண்டு. உப்பு போட்டு அந்தக் கஞ்சியை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அடுத்தது அலுமினியம் இட்லி குக்கர் வைத்திருக்கிறோம். இதில், துணி போட்டுதான் இட்லி செய்வோம். இதில் இட்லி சுட்டால் பூப்போல வரும். எண்ணெய் தேய்த்து இட்லி வைக்கும் முறையைவிட இது குறைந்த நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
ஈயம் சொம்பில் ரசம் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதன் சுவையும் வேற லெவலில் இருக்கும். அதுமட்டுமின்றி, பனையோலையில் செய்த முரம்தான் பயன்படுத்துகிறோம். இதனைப் பராமரிப்பதும் முக்கியம். அதற்கு நியூஸ்பேப்பர் மற்றும் வெந்தயம் கலந்து 3 நாள்கள் ஊறவைத்து, அரைத்து அதனை முரத்தின் முன்னும் பின்னும் நன்கு தேய்த்து வெய்யிலில் காயவைத்து எடுக்கவேண்டும். பிறகு தாராளமாகப் பயன்படுத்தலாம்” என்றபடி தன் காணொளியை நிறைவு செய்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil