Serial Actress Sharanya Turadi Hair growth Tips Tamil News : இந்தக் காலத்துத் தலைமுறையினருக்குத் தலைமுடியைப் பராமரிப்பது என்பது பெரும்பாடாக இருக்கிறது. என்னதான் பார்த்துப்பார்த்துப் பராமரித்தாலும், முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லை பலரை தொற்றுக்கொண்டுள்ளது. இதற்கான தீர்வுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் முன்னாள் செய்தி வாசிப்பாளரும் சின்னத்திரை நடிகையுமான சரண்யா துராடி.

“வீட்டில் எனக்கென தனி சீப்பு எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் போது எப்போதுமே எல்லா முடிகளையும் சேர்த்து குதிரைவால் போட்டுப்பேன் அல்லது சாதாரண கிளிப் போட்டு விட்டுவிடுவேன். அப்படியும் இல்லையென்றால் அஞ்சலி பாப்பா மாதிரி லூஸ் ஹேரில் இருப்பேன். ஆனால், முடியை டைட்டாக பின்னக்கூடாது. எல்லாவற்றையும்விட முக்கியமானது, முடியை சிக்கில்லாமல் வைத்திருக்கவேண்டும். நான் விரலால்தான் சிக்கெடுப்பேன்.

அதேபோல, எண்ணெய் தேய்த்து தலை குளிப்பது அவசியம். என் முடி அடர்த்தியாக இருப்பதனால், நான் வாரத்திற்கு ஒருமுறைதான் தலை குளிப்பேன். அதேபோல அதனை காயவைக்க ட்ரையர் உபயோகப்படுத்த மாட்டேன். வெய்யிலில்தான் காயவைப்பேன். ஒர்க் அவுட் செய்தபிறகும், ஆவிபிடித்தபிறகும் நன்கு வேர்த்திருக்கும். அந்த நேரங்களில் நிச்சயம் தலையை அலசிவிடுவேன்.

இந்தக் காலத்து இளைஞர்கள் செய்யும் பெரும்பாலான தவறு, ஷாம்பு உபயோகத்தில் கவனக்குறைவாக இருப்பது. நுரை அதிகம் வந்தால்தான் நல்ல ஷாம்பூ என்கிற தவறான பிம்பம் அனைவர்க்கும் இருக்கிறது. ஆனால், அப்படியல்ல. அதன் வேலையை செய்தாலே போதும் என்கிற மனநிலைக்கு வரவேண்டும். முடிந்தவரை கெமிக்கல் இல்லாத ஷாம்பூ பயன்படுத்துவது சிறந்தது. நான் பெரும்பாலும் சலூன் ஷாம்பூகளைதான் பயன்படுத்துவேன். இல்லையென்றால், இயற்கைப் பொருள்களைக் கொண்டு முடியை அலாசுவேன்.

அதேபோல் எண்ணெய் விஷயத்திலும் நான் எதை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தமாட்டேன். வெறும் தேங்காய் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்துவேன். அதில், எந்தவித வேர் வகைகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் எனக்குப் பிடிக்காது. என்னதான் எண்ணெய் தேய்த்து குளித்தாலும், முடியை மட்டும் அலசக்கூடாது. ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்திருப்பதுதான் அவசியம். அதனை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்றால்தான் பொடுகு போன்ற பிரச்சனைகள் வரும். உடலை அதிகப்படியாகச் சூடாக்காமல் குளிர்ச்சியாகப் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம். பித்தம், வாதம், கபம் எல்லாம் சமமாக வைத்திருக்கவேண்டும்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil